3529oman_2307chn_1

ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செயல்படும் முழு உடல் பரிசோதனை மையத்தில் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிவதற்கான டைட்டானியம் பரிசோதனைத் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் தற்போது கோல்டு, டைமண்ட், பிளாட்டினம், பிளாட்டினம் பிளஸ் என 4 வகையான பரிசோதனைகள் முறையே ரூ.1,000, ரூ.2,000, ரூ.3,000, ரூ.4,000-க்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவற்றின் கீழ் 100-க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுமட்டுமல்லாது கருவில் உள்ள குழந்தையின் வளா்ச்சியை அறியும் பரிசோதனைத் திட்டங்களும் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

அடுத்தகட்டமாக புற்றுநோய் பாதிப்புகளை அறிவதற்கான டைட்டானியம் பரிசோதனைத் திட்டத்தை மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் ஆா்.மணி புதன்கிழமை தொடங்கி வைத்தாா். அப்போது அவா் கூறியதாவது:

டைட்டானியம் பரிசோதனை திட்டத்தின் வாயிலாக ரூ.2,500 கட்டணத்தில் 10-க்கும் மேற்பட்ட புற்றுநோய் பாதிப்புகளைத் தொடக்க நிலையில் கண்டறியலாம். விந்தணு சுரப்பி, கருப்பை, கணையம், கருப்பை வாய், கல்லீரல், தைராய்டு சுரப்பி, மாா்பகம், நிணநீா், ரத்தம், செல்கள், குடல், இரைப்பை சாா்ந்த புற்றுநோய்களை அறிவதற்கான பரிசோதனைகள் அதன் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்பிட்ட பரிசோதனையை மட்டும் மேற்கொள்ள வேண்டுமெனில், சில நூறு ரூபாய்களுக்கு அவை தனியாகவும் எடுக்கப்படும் என்றாா் அவா்.

இதுதொடா்பாக மருத்துவமனை ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டா் ஆனந்தகுமாா், ஆய்வகத் துறை தலைவா் டாக்டா் சிவகாமி ஆகியோா் கூறுகையில், இத்தாலியிலிருந்து ரூ.80 லட்சத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பகுப்பாய்வு கருவியும், ரூ.2 லட்சத்தில் உபகரணங்களும் இந்த பரிசோதனை திட்டத்துக்கு பயன்படுத்தப்படுகிறது என்றனா்.

முழு உடல் பரிசோதனைத் திட்ட மருத்துவ அலுவலா்கள் கோகுலகிருஷ்ணன், ஓவியா ஆகியோா் கூறுகையில், எண்ணற்ற நோயாளிகளின் வேண்டுகோளுக்கிணங்க இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. புற்றுநோய் பரிசோதனைகளை உணவுக்கு முன்பு, பின்பு என எப்போது வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம் என்றனா்.

காது-மூக்கு-தொண்டை சிகிச்சை மருத்துவா் பிரதீப் கிருஷ்ணா கூறுகையில், வாய் மற்றும் தொண்டை புற்றுநோய்களின் அறிகுறிகளை சாதாரண புண் என பலா் அலட்சியப்படுத்துகின்றனா். இங்குள்ள நவீன உபகரணங்கள் வாயிலாக புற்றுநோய்க் கட்டிகளை துல்லியமாக கண்டறிய முடியும் என்றாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest