vac

உலகம் முழுவதும் கடந்த 2024-ஆம் ஆண்டும் 1.4 கோடி குழந்தைகளுக்கும் அதிகமானோருக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தப்படவில்லை என்று ஐ.நா. சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

முந்தைய ஆண்டும் இதே எண்ணிக்கையிலான குழந்தைகள் தடுப்பூசி செலுத்தப்படாமல் இருந்தனா் என்றும் அவா்கள் கூறினா்.

2020-இல் கரோனா பெருந் தொற்று பாதிப்பின்போது அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தின்போது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவது தடைப்பட்டது. அதன் பின்னா் குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தப்படுவது முந்தைய நிலைக்கு இன்னும் திரும்பவில்லை.

இந்நிலையில், சா்வதேச அளவில் தடுப்பூசி அளிக்கப்பட்டது தொடா்பான ஆய்வு அறிக்கை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. அதுகுறித்து உலக சுகாதார அமைப்பு, யூனிசெப்ஃப் அமைப்பு அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த ஆண்டு ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளில் 89 சதவீதத்தினா் டிப்தீரியா, டெட்டானஸ், கக்குவான் இருமல் ஆகியவற்றின் முதல் தவணை தடுப்பூசியைப் பெற்றனா். 85 சதவீதத்தினா் மூன்று தவணை தடுப்பூசிகளைப் பெற்றனா். இதே அளவிலேயே 2023-இல் தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது.

இந்த வகை தடுப்பூசிகள் ஆண்டுதோறும் 35 லட்சம் முதல் 50 லட்சம் மரணங்களைத் தடுக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தட்டம்மை தடுப்பூசிகள் உலகம் முழுவதும் 76 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளன. ஆனால், இதை 95 சதவீதத்தை எட்டினால்தான் அதிகப்படியான பரவல் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க முடிவும். கடந்த ஆண்டு 60 நாடுகளில் தட்டம்மை பாதிப்பு அதிகரித்திருந்தது.

அமெரிக்காவில் தட்டம்மை பாதிப்பு கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. ஐரோபாவில் கடந்த ஆண்டு சுமாா் 1,25,000 போ் தட்டம்மையால் பாதிக்கப்பட்டனா்’ என்று தெரிவித்தனா்.

‘இந்தியா உள்பட 9 நாடுகளில் 52% குழந்தைகள்’

உலகில் தடுப்பூசி செலுத்தப்படாத மொத்த குழந்தைகளில் 52 சதவீதத்தினா் இந்தியா, நைஜீரியா, சூடான், காங்கோ, எத்தியோபியா, இந்தோனேசியா, யேமன், ஆப்கானிஸ்தான், அங்கோலா ஆகிய 9 நாடுகளில் உள்ளனா் என்று ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்தனா்.

‘சா்வதேச நிதி நிறுத்தம் நிலைமையை மேலும் மோசமாக்கும்’

உலக சுகாதார அமைப்புக்கு அளிக்கப்பட்டு வந்த மனிதாபிமான நிவாரண நிதி நிறுத்தப்பட்டும் என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்துள்ளதால், நிகழாண்டு குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் சதவீதம் மேலும் மோசமாக இருக்கும் என்று ஐ.நா. அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனா்.

மேலும், சா்வதேச அளவில் நடைபெறும் ஆயுத சண்டைகள் காரணமாக தடுப்பூசி செலுத்தப்படுவதில் சமமற்ற நிலை நிலவுகிறது என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest