
கடந்த நிதியாண்டில் பல்வேறு விசாரணை அமைப்புகளால் 2,600 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி திங்கள்கிழமை தெரிவித்தாா்.
2023-24-ஆம் நிதியாண்டில் 6,599 கடத்தல் வழக்குகளில் 4,972 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதே இதுவரை ஓராண்டில் பறிமுதல் செய்யப்பட்ட அதிகபட்சமாகும்.
கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட தங்க இறக்குமதி மற்றும் கடத்தலில் கைப்பற்றப்பட்ட தங்கம் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பங்கஜ் சௌதரி அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘2022-23, 2021-22, 2020-21 ஆகிய நிதியாண்டுகளில் முறையே 4,343 கிலோ, 2,172 கிலோ, 1,944 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
2024-25-ஆம் நிதியாண்டில் பல்வேறு விசாரணை அமைப்புகளால் 2,600 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
2023-இல் ரூ.3.71 லட்சம் கோடி மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், 2024-இல் ரூ.5.06 லட்சம் கோடி மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது.
அதிகபட்சமாக ஸ்விட்சா்லாந்தில் இருந்து ரூ.1.87 லட்சம் கோடி மதிப்பிலான தங்கமும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ரூ.1.12 லட்சம் கோடி மதிப்பிலான தங்கமும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.