98681742024113681ADMKPRESSMEETSALEM1

கடலூரில் இன்று காலை தனியார் பள்ளி வேன் ஒன்று செம்மங்குப்பம் ரயில்வே பாதையைக் கடக்கும்போது ரயில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், பதினொன்றாம் வகுப்பு மாணவி சாருமதி மற்றும் ஆறாம் வகுப்பு நிவாஸ் ஆகியோர் உயிரிழந்தனர்.

சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட 10-ம் வகுப்பு மாணவன் செழியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வேன் டிரைவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

அதேசமயம், விபத்துக்குப் பிறகு அங்கு கூடிய பொதுமக்கள், ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாததால்தான் விபத்து ஏற்பட்டதாக கேட் கீப்பரை தாக்க ஆரம்பித்தனர்.

கடலூர் பள்ளி வேன் விபத்து
கடலூர் பள்ளி வேன் விபத்து

ஆனால், கேட்டை கேட் கீப்பர் மூடத் துவங்கியபோது, வேன் டிரைவர் வேனை வேகமாக இயக்கியதாகக் கூறும் தெற்கு ரயில்வே நிர்வாகம், கேட் மூடப்படவில்லை என்பது உண்மைக்குப் புறம்பான தகவல் என்று தெரிவித்திருக்கிறது.

மறுபக்கம், இந்த சோக சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்த மாணவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.

இந்த நிலையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சம்பவம் நடந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைக்க ஒப்புதல் அளித்து அதற்கு நிதி தருவதாகவும் தென்னக ரயில்வே கூறியபோதும் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஒரு வருடமாக இதற்கு அனுமதி தராதது இந்த விபத்துக்கு காரணம் என்று தி.மு.க அரசைக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி, “தென்னக ரயில்வே இன்று வெளியிட்ட செய்தியில் இன்னொரு முக்கியமான விவகாரத்தை சுட்டிக்காட்டி உள்ளது.

அதாவது இந்த விபத்து நடந்த இடத்தில் அண்டர் பாஸ் எனப்படும் சுரங்கப்பாதை அமைப்பதற்கு தென்னக ரயில்வே ஒப்புதல் அளித்து அதற்கான முழு நிதியையும் தானே தருவதாகவும் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து விட்டது.

எடப்பாடி பழனிசாமி

ஆனால், கடலூர் மாவட்ட கலெக்டர் கடந்த ஒரு வருடமாக இத்திட்டத்திற்கு அனுமதி தரவில்லை என்று தென்னக ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் எம். செந்தமிழ்செல்வன் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதன்படி பார்த்தால் இந்த கொடூரத்திற்கு முழுக்க கடலூர் மாவட்ட நிர்வாகம் தான் காரணம் என்றாகிறது.

உங்களுடன் ஸ்டாலின், எங்களுடன் ஸ்டாலின் என்றெல்லாம் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வருடமாக இந்த சுரங்கப்பாதைக்கு மாவட்ட கலெக்டர் ஒப்புதல் அளிக்காதது தெரியாதா?

இந்த ஒரு வருடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கடலூர் மாவட்டத்திற்கு எத்தனை முறை ஆய்வுக் கூட்டம் நடத்த வந்திருக்கிறார்?

கடலூர் மாவட்ட அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கணேசன் ஆகியோர் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

கடலூர் தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.பி விஷ்ணு பிரசாத் என்ன செய்து கொண்டிருக்கிறார்?

மாவட்ட கலெக்டர் அனுமதி கொடுத்திருந்தால், அந்த இடத்தில் சுரங்கப்பாதை கட்டப்பட்டிருக்கும். பச்சிளம் உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

மாவட்டம் நிர்வாகத்தை முடுக்கி விட வேண்டிய, இந்த கொடூரம் நடந்த பகுதியை உள்ளடக்கிய குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினரான அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் என்ன செய்து கொண்டிருந்தார்?

எல்லா வகையிலும் கடமை தவறி விட்டது இந்த அரசு. இந்த விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்தி என்ன நடந்தது என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் மக்களிடம் காரணத்தோடு விளக்க வேண்டும்.” என்று வலியுறுத்தியிருக்கிறார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest