
கடலூர் அருகே தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதி பள்ளி மாணவர்கள் பலியான விவகாரத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதுவரை இரங்கல் தெரிவிக்கவில்லை.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே திறந்திருந்த ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது செவ்வாய்க்கிழமை காலை ரயில் மோதி கோர விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் 2 மாணவர்கள், 1 மாணவி உள்பட மூவர் பலியாகினர்.
மேலும், பள்ளி வேனின் ஓட்டுநர், இரண்டு மாணவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரயில்வே அமைச்சர் எங்கே?
தமிழகத்தை உலுக்கியுள்ள ரயில் விபத்து குறித்து இதுவரை பிரதமர் நரேந்திர மோடியோ, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவோ ஒருவார்த்தைகூட பேசவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கிறார் என்ற வாதத்தை முன்வைத்தாலும், ரயில்வே துறைக்கு பொறுப்பாகவுள்ள மத்திய அமைச்சர் எங்கே? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மூத்த மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்பட யாரும் இதுவரை சமூக வலைதளங்களில்கூட இரங்கல் தெரிவிக்கவில்லை.
(தெற்கு ரயில்வே தரப்பில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது)
யார் காரணம்?
இந்த விபத்து குறித்து தெற்கு ரயில்வே முதலில் வெளியிட்ட அறிக்கையில், ரயில்வே கேட்டை கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மூடியதாகவும், பள்ளி வேன் ஓட்டுநர் கேட்டுக்கொண்டதால் திறந்ததாக வெளியிடப்பட்டது. ஆனால், அதே அறிக்கையை திருத்தி இரண்டாவதாக வெளியிட்ட போது, கேட்டை மூடும்போது, வேன் ஓட்டுநர் மூட வேண்டாம் என்று கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ரயில்வே அறிக்கையிலேயே முன்னுக்குப்பின் முரணாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, காலை 7.10 மணிக்கு ரயில் வருவது தெரிந்து 7.06 மணிக்கு கேட்டை பூட்டியதாகவும், இருசக்கர வாகன ஓட்டிகள் அழுத்தத்தின் காரணமாக கேட் கீப்பர் மீண்டும் திறந்ததாகவும் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
ஆனால், வேன் வந்தபோது ரயில்வே கேட் திறந்துதான் இருந்தது என்று வேன் ஓட்டுநர், காயமடைந்து சிகிச்சையில் உள்ள மாணவன் மற்றும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் பேட்டி அளித்துள்ளனர்.
இதில், யார் சொல்வது உண்மை என்பது ஒருபுறம் இருக்க, ரயில் வருவதை அறிந்தும் கேட்டை திறந்து வைத்திருந்தது / திறந்தது கேட் கீப்பரின் குற்றம் என்று அப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.