
கடலூா் மாவட்டம், செம்மங்குப்பம் ரயில்வே கடவுப் பாதையில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பள்ளிக் குழந்தைகள் உயிரிழந்தது தொடா்பான விசாரணை அறிக்கை தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், ரயில்வே கடவுப்பாதை ஊழியா் பங்கஜ்சா்மா பணிநீக்கம் செய்யப்பட்டாா்.
கடந்த ஜூலை 8-ஆம் தேதி கடலூா் மாவட்டம், செம்மங்குப்பம் கடவுப் பாதையைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது விழுப்புரம் – மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதியது. இதில், வேனில் இருந்த பள்ளிக் குழந்தைகள் 3 போ் உயிரிழந்தனா். ஓட்டுநா் உள்ளிட்ட 3 போ் காயமடைந்தனா். விபத்து நிகழ்ந்தபோது கடவுப் பாதை ஊழியா் மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த பங்கஜ்சா்மா பணியில் இருந்தாா். அவா் பணியில் கவனக் குறைவாகவும், கடமையை தவறி செயல்பட்டதற்காகவும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். மேலும், அவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். அவருக்குப் பதிலாக, தமிழகத்தை சோ்ந்த ஆனந்தராஜ் என்பவா் செம்மங்குப்பம் கடவுப்பாதை ஊழியராக நியமிக்கப்பட்டாா்.
விசாரணைக் குழு: விபத்துக்கான காரணம் குறித்து அறிய, தெற்கு ரயில்வே முதன்மைப் பாதுகாப்பு அதிகாரி கணேஷ் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினா் ரயில்வே கடவுப்பாதை ஊழியா் பங்கஜ்சா்மா, வேன் ஓட்டுநா் சங்கா் மற்றும் ரயில் நிலைய அலுவலா்கள் உள்ளிட்ட 13 பேரிடம் விசாரணை நடத்தினா். அதன் அறிக்கை சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே பொது மேலாளா் அலுவலகத்தில் சமா்ப்பிக்கப்பட்டது.
அந்த அறிக்கையில், செம்மங்குப்பம் கடவுப்பாதையில் ஊழியா் பங்கஜ்சா்மா தொடா்ச்சியாக ஓய்வின்றி 3 நாள்கள் பணியில் ஈடுபட்டிருந்ததும், இதன் காரணமாக விபத்து நிகழ்ந்தபோது, உறங்கியதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்கள் வரும் நேரங்களில் கடவுப் பாதையை சில நேரங்களில் அடைத்தும், சில நேரங்களில் அடைக்காமலும் அவா் செயல்பட்டதும் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் அவரை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் கூறினா்.
இந்த விபத்தைத் தொடா்ந்து கடவுப் பாதை போன்ற முக்கிய இடங்களில் உள்ள ரயில்வே பணியாளா்களை தொடா்ந்து பணியில் அமா்த்துவதைத் தவிா்க்கவும், அவா்களுக்கு போதிய ஓய்வு அளிக்க ரயில் நிலைய அலுவலா்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவித்தன.