
கடினமான எந்தவொரு வளர்ச்சிப் பணியையும் கைவிடுவது காங்கிரஸின் “இயல்பான பழக்கம்” என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
அருணாச்சலப் பிரதேசத்தில் ரூ. 5,100 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி. அதன்பின்னர் வர்த்தகர்கள் மற்றும் வரி செலுத்துவோர் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். அவர்களிடம் ஜிஎஸ்டி வரி குறைப்பால் ஏற்பட்ட நன்மைகள் குறித்துக் கேட்டறிந்தார்.
பின்னர் இட்டா நகரில் உள்ள இந்திரா காந்தி பூங்காவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது,
அருணாச்சலப் பிரதேசம் அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் பூமி. வடகிழக்கு மாநிலத்தை தில்லியில் இருந்து மேம்படுத்த முடியாது என்பது தனக்குத் தெரியும் என்பதால், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அடிக்கடி இந்தப் பகுதிக்கு அனுப்பியதாகவும், 70 முறைக்கு மேல் வடகிழக்கு மாநிலங்களுக்குத் தான் வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
காங்கிரஸின் உள்ளார்ந்த பழக்கம் என்னவென்றால், அவர்கள் ஒருபோதும் கடினமான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள மாட்டார்கள். காங்கிரஸ் ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டது.
நவராத்திரியின் முதல் நாளில் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் தொடங்கப்படுவதன் மூலம், இந்த பண்டிகை காலத்தில் மக்கள் “இரட்டை வரவு ” பெறுவார்கள். இன்று, நாடு முழுவதும் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
காங்கிரஸ் அதிக வரிச்சுமையை மக்கள் மீது சுமத்தியது. ஆனால் மோடி அரசு படிப்படியாக வரிகளைக் குறைத்து நிவாரணம் அளித்துள்ளது. அருணாசலில் இரண்டு மக்களவை தொகுதிகள் மட்டுமே உள்ளதால், எல்லை கிராமங்களைக் காங்கிரஸ் புறக்கணித்துள்ளது. இதனால் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக மோடி குற்றம் சாட்டினார்.
அருணாச்சலப் பிரதேசம் கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசிடமிருந்து ரூ.1 லட்சம் கோடியைப் பெற்றுள்ளது. இது காங்கிரஸ் ஆட்சியின் போது பெற்றதை விட 16 மடங்கு அதிகம் என்று அவர் கூறினார். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.