
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், குடும்பத் தகராறில், கணவரைக் கொன்று, வீட்டுக்குள்ளேயே 5 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி, புதைத்துவிட்டு, கேரளத்துக்கு அவர் வேலைக்குச் சென்றுவிட்டதாக நாடகமாடிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துளள்து.
அசாம் மாநிலம் குவகாத்தியில், சபியால் ரஹ்மான் (40) என்பவரைக் கொன்று வீட்டுக்குள் புதைத்தக் குற்றத்துக்காக 38 வயதாகும் அவரது மனைவி ரஹிமா கதுன் கைது செய்யப்பட்டார்.
ஜோய்மதி நகரில் வாழ்ந்து வந்த பழைய இரும்புச் சாமான் வாங்கி விற்கும் வியாபாரி, ஜூன் 26ஆம் தேதி கொலை செய்யப்பட்டு, வீட்டுக்குள்ளேயே புதைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
15 ஆண்டுகளுக்கு முன்பு, இவர்களுக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவரைக் கொன்று வீட்டுக்குள் புதைத்துவிட்டு, அவர் கேரளத்துக்கு வேலைக்குச் சென்றுவிட்டதாக அக்கம் பக்கத்தினரிடம் கூறியிருக்கிறார்.
இதனிடையே, தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவமனையில் சேரப்போவதாகச் சொல்லிவிட்டு வீட்டைவிட்டுச் சென்றிருக்கிறார்.
ஆனால், அவர் சொன்னதில் அக்கம் பக்கத்தினருக்கும், ரஹ்மானின் உறவினர்களுக்கும் சந்தேகம் எழுந்தது. ரஹ்மானின் சகோதரர், இது பற்றி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இது பற்றி தெரிந்துகொண்ட ரஹிமா, உடனடியாக காவல்நிலையத்தில் சரணடைந்து, தனது கணவரைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
ஜூலை 26 அன்று, தனக்கும் கணவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு இருவரும் ஒருவரையொருவர் தாக்கியதில், கணவருக்கு படுகாயமடைந்து மரணம் அடைந்துவிட்டதாகவும், என்ன செய்வது என்று தெரியாமல், வீட்டுக்குள்ளேயே பள்ளம் தோண்டி உடலைப் புதைத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, வீட்டுக்குள், ரஹ்மான் உடலை தோண்டி எடுத்து உடல்கூராய்வு செய்தனர். அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டாலும், இவ்வளவு பெரிய பள்ளத்தை தனி நபராக தோண்டியிருக்க முடியாது என்பதால், இதில் வேறு யாருக்கேனும் தொடர்பிருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.