கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள சங்கரமலைப்பட்டியில் மலை உச்சியில் ஸ்ரீசௌந்தரநாயகி உடன் சங்கரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ,அதேபோல், இந்தக் கோயில் பொன்னர், சங்கர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறு குறித்த கல்வெட்டுகள் கோவில் மலை பாறைகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் 200 ஆண்டுகளுக்கு முன்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோயிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகளை ஊர் பொதுமக்கள் பங்களிப்புடன் அறநிலையத்துறை பணியை துவங்கி உள்ளது. இந்நிலையில், மலை உச்சியில் கோயில் கோபுரத்தில் உள்ள விலை உயர்ந்த கலசம் நேற்று இரவு திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாயனூர் காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பழமையான கோயில் மலை உச்சியில் கலசம் இருந்ததால், சுற்றுவட்டாரப் பகுதியில் ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இதுவரை இடி, மின்னல் தாக்கியது இல்லை. எந்த ஒரு பாதிப்பும் நடக்கவில்லை என ஊர் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதேபோன்று, பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்தில் உள்ள 1946 – ம் வருஷம் கும்பாபிஷேகம், செய்யப்பட்ட அழகு நாச்சியம்மன் கோயிலிலும் 3 கலசத்தை திருடிய திருடர்கள், அவர்கள் எதிர்பார்த்தது போல் கலசம் விலை உயர்ந்த்தாக இல்லை என்பதால் அவற்றை கோயில் அருகிலேயே போட்டு விட்டுச் தப்பி ஒடிவிட்டனர். இது குறித்து, லாலாபேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணராயபுரம் அருகே பகுதியில் அடுத்தடுத்து இரு கோயில் கோபுர கலசங்கள் திருட்டு சம்பவம் குறித்து கரூர் மாவட்ட காவல்துறை தனிப்படை அமைத்து பழமையான பிரசித்தி பெற்ற கோவில்களில் உள்ள கோபுர கலசங்களை திருடும் மர்ம கும்ப கும்பல் குறித்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்துள்ளது.