ANI_20250617024555

கர்நாடகத்தில் சாலையோரங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட மனித உடல் பாகங்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தின் துமகூரு மாவட்டத்தில் ஒரு கோவில் அருகே வியாழக்கிழமை காலை 8 மணியளவில் கேட்பாரற்றுக் கிடந்த பாலிதீன் பை இருப்பதை அறிந்த அப்பகுதியினர், அதனைச் சோதனை செய்தனர்.

அந்தப் பையில் மனிதர் ஒருவரின் கைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, கோயிலிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் மற்றொரு பையில் மற்றொரு கையும், அங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் இருந்து கண்டெடுக்கப்பட்ட 3-ஆவது பையில் 2 கால்கள் உள்பட இதயம், குடல், வயிறு உள்ளிட்ட மனித உடல் பாகங்களும் கிடந்தன.

3 கி.மீ. சுற்றளவில் 5 இடங்களில் இருந்து இந்த மனித உடல் பாகங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். இருப்பினும், தலையை மட்டும் தேடி வருகின்றனர்.

கிடைத்த உடல் பாகங்களை வைத்து ஆய்வு செய்ததிலும், கையில் இருந்த டாட்டூ மூலமும், இறந்தவர் பெண்ணாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

வேறு ஏதோ ஓரிடத்தில் பெண்ணைக் கொலைசெய்து, அவரின் உடல் பாகங்களைத் துண்டுதுண்டாக வெட்டி, வேறுவேறு இடங்களில் மர்ம நபர்கள் வீசிச் சென்றிருப்பதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

மீட்கப்பட்ட உடல் பாகங்களை உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்த காவல்துறையினர், காணாமல்போன பெண்கள் குறித்த புகார்களைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையுண்ட பெண் யார்? அவர் ஏன் கொலைசெய்யப்பட்டார்? கொலை செய்தவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Woman murdered, body parts dumped at 8 locations in Tumakuru

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest