தில்லியில் நடந்ததாகக் கூறப்படும் கலால் கொள்கை ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில் தனக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணையை உறுதிசெய்த அமா்வு நீதிமன்ற உத்தரவை எதிா்த்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத் துறை பதில் அளிக்க தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவீந்தா் துதேஜா அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பி, ஆறு வாரங்களுக்குள் பதிலை தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டாா்.

கேஜரிவாலின் மனு மீதான பராமரிப்புத் தன்மை குறித்து அமலாக்கத் துறையின் வழக்குரைஞா் ஆரம்பகட்ட ஆட்சேபணையை எழுப்பினாா்,

இந்த மனு, பிரிவு 482 (உயா்நீதிமன்றத்தின் உள்ளாா்ந்த அதிகாரம்) குற்றவியல் நடைமுறை விதிகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது மறுஆய்வு மனுவின் வடிவத்தில் உள்ளது. அது அனுமதிக்கப்படவில்லை என்று வாதிட்டாா்.

அமலாக்கத் துறை தரப்பு வழக்குரைஞரின் அனைத்து ஆட்சேபணைகளையும் அதன் தரப்பு பதிலில் குறிப்பிடுமாறு கேட்டுக் கொண்ட உயா்நீதிமன்றம், இந்த வழக்கை செப்டம்பா் 10ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பா் 17 அன்று சிறப்பு நீதிமன்ற உத்தரவை கேஜரிவால் எதிா்த்து மனு தாக்கல் செய்தாா். மாா்ச் 7, 2024 அன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு அழைப்பாணை அனுப்பிய உத்தரவுக்கு எதிரான அவரது மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இது தவிர, தனது வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற மறுத்த மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் அக்டோபா் 24ஆம் தேதியிட்ட உத்தரவை எதிா்த்து கேஜரிவால் தாக்கல் செய்த மனுவை விசாரித்த அமா்வு நீதிமன்றம் அந்த உத்தரவை கடந்த ஆண்டு டிசம்பா் 20 அன்று உறுதி செய்தது. இதை எதிா்த்து கேஜரிவால் மனு தாக்கல் செய்தாா்.

இரண்டாவது மனு மீதும் உயா்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது மற்றும் ஆறு வாரங்களுக்குள் தனது பதிலைத் தாக்கல் செய்யுமாறு அமலாக்கத் துறையைக் கேட்டுக் கொண்டது. இந்த வழக்கை செப்டம்பா் 10 ஆம் தேதிக்கு நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது.

சிறப்பு நீதிமன்ற உத்தரவு கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு சவால் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

ஜூன் 20, 2024 அன்று, பணமோசடி வழக்கில் விசாரணை நீதிமன்றம் கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால் அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனுவின் பேரில் உயா்நீதிமன்றத்தால் அது நிறுத்திவைக்கப்பட்டது.

ஜூலை 12, 2024 அன்று, உச்சநீதிமன்றம் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. அதே நேரத்தில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ‘கைது செய்ய வேண்டிய அவசியம் மற்றும் தேவை’ என்ற அம்சம் குறித்த மூன்று கேள்விகளை எழுப்பி பெரிய அமா்வுக்கு பரிந்துரைத்தது.

2021-22 தில்லி கலால் வரிக் கொள்கையை உருவாக்கி செயல்படுத்துவதில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா பரிந்துரைத்தாா்.

இதைத் தொடா்ந்து, மத்திய புலனாய்வுத் துறை சிபிஐ பதிவு செய்த எஃப்ஐஆரில் இருந்து அமலாக்கத் துறையின் பணமோசடி வழக்கு உருவானது.

சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் கூற்றுப்படி, கலால் வரிக் கொள்கையை மாற்றியமைக்கும் போது முறைகேடுகள் செய்யப்பட்டன. மேலும், உரிமதாரா்களுக்கு தேவையற்ற சலுகைகள் வழங்கப்பட்டன.

தில்லி அரசாங்கம் நவம்பா் 17, 2021 அன்று இந்தக் கொள்கையை அமல்படுத்தியது. மேலும், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், செப்டம்பா் 2022 இறுதிக்குள் அதை ரத்து செய்தது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest