
சென்னை: கல்வி அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். கல்வி நிதி விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் வேண்டாம் என தமிழ்நாடு அரசுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை ஐஐடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
கல்வி அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கையின் கீழ் மும்மொழிக் கொள்கையை செயல்படுத்துவதில் அரசியலைத் தவிர்க்க வேண்டும். மத்திய அரசின் ஒப்பந்தத்தை ஏற்றால்தான் கல்வி நிதியை தர முடியும். நிதியுதவி உள்ளிட்ட மத்திய அரசின் முயற்சிகள் மாணவர் நலன் மற்றும் கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. மாணவர்களுடைய நலனை விட உங்களின் அரசியலுக்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள். இது சரியானது அல்ல. கல்வி நிதி விவகாரத்தில் அரசியல் நிலைப்பாட்டை திணிக்கக் கூடாது.
கல்வி நிதி தொடர்பான பிரச்னையை மாநில அரசு பலமுறை எழுப்பி வருவதாகக் குறிப்பிட்ட பிரதான், கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் இது குறித்து பேசி வருகிறேன், நாடாளுமன்றத்திலும் தெளிவுபடுத்தியுள்ளேன். நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மதிய உணவுத் திட்டம் மற்றும் பிற திட்டங்கள் உட்பட கல்விக்காக மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிற்கு கணிசமான நிதியை ஒதுக்குகிறது.
நிதி விடுவிப்பு தொடர்பாக தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் திமுக எம்பி கனிமொழி ஆகியோர் தம்மை அணுகியதாக கூறிய பிரதான், சமக்ர சிக்ஷாவின் கீழ் நிதி விடுவிக்கப்படுவதற்கு முன்பு, மத்திய அரசின் மும்மொழி கல்வி ஒப்பந்தத்திற்கு மாநில அரசு உடன்பட வேண்டும் என்று அவர்களிடமே தெளிவாகக் கூறியுள்ளேன்.
மேலும், மத்திய அரசின் கல்வி நிதிகள் மாணவர்களின் நலனுக்கானது மட்டுமே, அரசியல் பேரம் பேசுவதற்கு உட்பட்டவை அல்ல. இரு தரப்பினரும் பரஸ்பர புரிதலுடன் செயல்பட வேண்டும். அரசியலுக்காக மாணவர்களுக்கான கல்வி வாய்ப்புகள் பாதிக்கப்படக்கூடாது.
தமிழக அரசுக்கு கல்வி சார்ந்த நிதியை வழங்கி வருகிறோம். ஆர்டிஇ நிதி தொடர்பாக நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. நான் அனைத்து விதமான ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருக்கிறேன் என்றார்.
மேலும், மும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் திமுக அரசை விமரிசனம் செய்த பிரதான், மூன்றாவது மொழியாக ஏதாவதொரு மொழியைதான் படிக்க சொல்கிறோம். அதில் என்ன தவறு?. தமிழக பள்ளிகளில் ஏற்கனவே தமிழ், ஆங்கிலம், தெலங்கு, உருது மற்றும் மலையாளம் போன்ற மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. மாணவர்கள் தங்கள் தாய்மொழியையும், விருப்பமான இரண்டு மொழிகளையும் கற்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட மொழியை யார் மீதும் திணிக்கவில்லை என்று அவர் கூறினார்.
தமிழ் கற்க ஆசை
ஆந்திரம் முதல்வர் என். சந்திரபாபு நாயுடுவின் பத்து மொழிகள் வரை கற்க வேண்டும் என்ற ஆலோசனையை குறிப்பிட்ட அமைச்சர், சங்க இலக்கிய காலத்தில் இருந்து இப்போது வரை தமிழ் மொழி அதே துடிப்புடன் இருக்கிறது. வரலாற்று மொழியான தமிழ் இன்னும் சிறப்பாக செயல்படுகிறது. அதை நானும் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன் என்ற தனது விருப்பத்தை தெரிவித்தார்.
காசி முதல் தென்காசி வரை, மக்கள் பொதுவான கலாசார தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்கள். பல மொழிகளைக் கற்க, முதலில் தாய்மொழியில் தேர்ச்சி பெற வேண்டும் என்றார்.
மேலும், நாட்டில் 30 கோடி மாணவர்கள் உள்ளனர், ஆனால் சுமார் 30 சதவீதம் பேர் 12 ஆம் வகுப்புக்குப் பிறகு பள்ளிப் படிப்பை பாதியிலே நிறுத்துவிடுகிறார்கள். இந்தச் சவாலை எதிர்கொள்ள பள்ளிக் கல்வியில் அடிப்படை சீர்திருத்தங்கள் தேவை என்று அவர் கூறினார்.