
திருநெல்வேலியில் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று சென்னை சைதாப்பேட்டையில் விசிகவினர் ஆர்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்பாட்டத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார்.
சிறப்பு புலனாய்வு விசாரணை
இந்த ஆர்பாட்டத்தில் திருமாவளவன், “கவின் வழக்கு விசாரணையைச் சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும்.

இந்தக் குழு உயர் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் அமைக்கப்பட வேண்டும்.
இந்த வழக்கில் இரண்டு காவல்துறையினர் சம்பந்தப்பட்டிருக்கின்றனர். அதனால், போலீஸ் மற்றும் சி.பி.சி.ஐ.டி விசாரணை நம்பகத்தன்மை அளிக்காது.
அதனடிப்படையில் தான், இந்தக் கோரிக்கையை நாங்கள் வைக்கிறோம்.
இது எங்களது முதல் கோரிக்கை.
தனிச்சட்டம் வேண்டும்
ஆணவக் கொலைக்கு தனிச்சட்டத்தை ஒன்றிய அரசு தான் இயற்ற வேண்டும். ஆனால், இந்தச் சட்டத்தை மாநில அரசும் இயற்றுவதற்கான வாய்ப்பு இருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும்.
‘ஒன்றிய அரசு இந்தச் சட்டத்தை இயற்றட்டும்’ என்று இருக்காமல், தமிழ்நாடு அரசு இந்தச் சட்டத்தை இயற்றி பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியான அரசாக இருக்கட்டும்.
இது எங்களுடைய இரண்டாவது கோரிக்கை.
விடுதலை கட்சிகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து மனு கொடுத்தோம்” என்று பேசினார்.