
வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் ஆகஸ்ட் 11 முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதித்து கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோயில் நிர்வாகம் சார்பில் வெளியிட்ட சுவரொட்டிகளில், காசி விஸ்வநாதரை சந்திக்க வரும் பக்தர்கள் யாரும் பிளாஸ்டிக் பொருள்களுடன் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவபெருமானின் புனித தலமாகக் கருதப்படும் ஆலயத்தில், கோயிலின் புனிதத்தைக் காக்கவும், தூய்மையைப் பராமரிக்கவும் பிளாஷ்டிக் இல்லாத சூழலைப் பராமரிக்க வேண்டும் என்று கோயில் நிர்வாகத்தின் சார்பில் பணிவுடன் பக்தர்களைக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஆகஸ்ட் 11 முதல், பக்தர்கள் இனி பிளாஸ்டிக் கேனைப் பயன்படுத்தி சிவபெருமானுக்கு தண்ணீர் வழங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆடி மாதத்தின் முதல் திங்கள்கிழமை முதல் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது. பக்தர்கள் பிளாஸ்டிக்கில் பிரசாதங்களை எடுத்துச் செல்லவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கோயிலின் தலைமை நிர்வாக அதிகாரி விஸ்வபூஷன் மிஸ்ரா கூறுகையில்,
காசி விஸ்வநாதர் கோயில் ஆன்மிக மையம் மட்டுமல்ல, தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் ஒரு முன்மாதிரியாக மாற வேண்டும். மாசுவிலிருந்து விடுபட்டு எதிர்கால சந்ததியினருக்குப் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சி இது.
நாடு முழுவதும் வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு வருவதைத் தவிர்த்து, சுற்றுச்சூழல் விழிப்புணர்வுடன் இருக்குமாறு நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கோயிலின் நுழைவுவாயில்களிலும் பிளாஸ்டிக் சோதனைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சிக்கு நகராட்சி, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
எதிர்காலத்தில் இந்த பிரசாரத்தை நகரம் முழுவதும் விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.