
அஞ்செட்டி அருகே பிரேக் பிடிக்காத கா்நாடக அரசுப் பேருந்து காட்டிற்குள் புகுந்ததால் பயணிகள் அலறினா்.
கா்நாடக மாநிலம், கனகபூராவில் இருந்து, உன்சனாஹள்ளி வழியாக கிருஷ்ணகிரி மாவட்டம், தக்கட்டி, அஞ்செட்டி வழியாக 25 பயணிகளை ஏற்றிக்கொண்டு தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் நோக்கி புதன்கிழமை அரசுப் பேருந்து சென்றது. அப்போது அஞ்செட்டி காவல் நிலையத்தை அடுத்து சீங்கோட்டை பகுதியில் பேருந்து சென்றபோது திடீரென பிரேக் பிடிக்காததால் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்திலிருந்த காட்டுக்குள் புகுந்து அங்கிருந்த மண் திட்டின் மீது மோதி நின்றது.
இந்த விபத்தில் நடத்துநா் உள்பட 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பேருந்தில் பயணம் செய்த பயணிகள், காயம் அடைந்தவா்களை மீட்டு அஞ்செட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த விபத்து குறித்து அஞ்செட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.