
முன்னாள் முதல்வர் காமராஜருக்காக அனைத்து அரசு பயணியர் விடுதியிலும் குளிர்சாதன வசதியை கருணாநிதி கொண்டு வந்ததாகவும், நாட்டையும் ஜனநாயகத்தையும் கருணாநிதிதான் காப்பாற்ற வேண்டுமென்றும் காமராஜர் கோரியதாக திமுக எம்.பி. திருச்சி சிவா செவ்வாய்க்கிழமையில் கட்சிப் பொதுக்கூட்டத்தில் பேசியிருந்தார்.
காமராஜர் குறித்த திருச்சி சிவாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வரும்நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “கர்மவீரர் காமராஜரைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுகவினருக்கு தமிழக பாஜக சார்பாகக் கண்டனங்கள். மறைந்த தலைவர்களைக் கொச்சைப்படுத்திப் பேசுவது, அவர்களது மேன்மையை இழிவுபடுத்திப் பேசுவது திமுகவுக்குப் புதிதில்லை. குறிப்பாக, கர்மவீரர் காமராஜரைக் கொச்சைப்படுத்திப் பேசுவது திமுகவினரின் வழித் தோன்றல்களுக்குப் புதிதில்லை.
தற்போது, திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை புகழ்கிறேன் என காமராஜரை குறைத்துப் பேசியிருப்பது, அதுவும் வரலாற்றுத் திரிபைச் செய்திருப்பது வருந்தத்தக்கது என்பதைவிட வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.
தன் மறைவுக்கு முன்பு கருணாநிதியின் கரங்களைப் பிடித்துக் கொண்டு, ஜனநாயகத்தைக் காக்க வேண்டுமென்று காமராஜர் கேட்டதாகவும், மின் வெட்டினைக் கண்டித்தும் திமுக அரசின் அவலத்தை எதிர்த்தும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய காமராஜர், ஏசி இல்லாமல் இருக்கமாட்டார் என்றும் அவருடைய தங்கும் விடுதி உள்பட அனைத்து இடங்களிலும் குளிர்சாதன வசதி செய்தவர் கருணாநிதி என்றும் திருச்சி சிவா பேசியுள்ளார்.
ஏழை எளிய மக்களின் வாழ்வு மேம்பட உழைத்த ஒப்பற்ற மனிதரான காமராஜர் சுகவாழ்வு வாழ்ந்தார் என்பது போல உள்நோக்கம் கொண்டு திருச்சி சிவா பேசியிருப்பது உண்மையிலேயே பேரதிர்ச்சியாக உள்ளது.
அதோடு எமர்ஜென்சியின்போது காமராஜரைக் கைது செய்ய கங்கணம் கட்டிக் கொண்டிருந்த இந்திரா காந்தியிடமிருந்து திமுக அரசுதான், அவரைக் காத்தது என்றும் பேசியுள்ளார்.
சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையர்களை எதிர்த்து சிறை சென்ற காமராஜரை இந்திரா காந்தியிடமிருந்து காத்தோமென திமுக சொல்வதெல்லாம் நகைப்புக்குரியது. காமராஜரை அன்று இந்திரா காந்தி கைது செய்திருந்தால், தமிழகமே வெகுண்டெழுந்திருக்கும்.
இன்று அதை வைத்து அவரை இழிவு செய்யும் திமுகவுக்கு எதிராகவும் நிச்சயமாக வெகுண்டெழும். மேலும், இந்திரா காந்தியின் எதேச்சதிகாரத்தை எதிர்த்துதான் காங்கிரஸ் அன்று உடைந்தது.
அப்போது காமராஜரை எதிர்த்துக் கொண்டு இந்திரா காந்தியோடு கூட்டணி வைத்தது யார்? இதே கருணாநிதி தலைமையிலான திமுகதானே? காமராஜரின் புகழும், அரசியலும் அழிய வேண்டுமென்று பணி செய்தது திமுகதான். அவர்களுடைய ஆழ் மனதின் வன்மம் எப்போதும் காமராஜரைப் பதம் பார்த்துக் கொண்டேதான் உள்ளது.
சட்டப்பேரவையிலேயே காமராஜரின் அருஞ்செயலை கருணாநிதி மீது ஏற்றிக் கூறினார் அமைச்சர் துரைமுருகன். காமராஜருக்கே கல்லறை கட்டினோம் எனக் கொச்சையாகப் பேசினார் ஆர்.எஸ். பாரதி.
அதே வரிசையில் அவதூறை அள்ளித் தெளித்துள்ளார் திருச்சி சிவா. உண்மை என்னவென்றால், தன்னுடைய ஒப்பற்ற தலைவர்களில் ஒருவரான காமராஜர் மீது காங்கிரஸ் கட்சியே தீரா காழ்ப்பில்தான் உள்ளது.
அதனால்தான் திமுக காமராஜரைக் கொச்சைப்படுத்தும் போதெல்லாம், பெயருக்குக்கூட ஒரு கண்டனம் தெரிவிக்காமல், உள்ளூர ரசித்தப்படியே கூட்டணியில் தொடருகிறது. காமராஜரைக் கொச்சைப்படுத்திப் பேசியதற்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இதை ஒரு போதும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இதைத் தமிழக பாஜகவும் எளிமையாகக் கடந்து செல்லாது என்பதையும் தெளிவாகக் கூறிக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.