SELLUR_RAJU

கடந்த வாரம் மதுரை வந்த அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய காரில் செல்லூர் ராஜுவை ஏற்க மறுத்ததாக சமூக வலைத்தளங்களில் வெளியான விடியோவுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், கீழடி அருங்காட்சியகத்துக்கு கடந்த ஜூலை 30ஆம் தேதி அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி வந்திருந்தார். அங்கு காட்சிப்படுத்தி வைக்கப்பட்டிருந்த பொருள்களை பார்வையிட்டார்.

இதற்காக, அவர் மதுரையிலியிருந்து சிவகங்கைக்கு காரில் புறப்பட்ட போது, எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய காரில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை ஏற்ற மறுத்ததாக விடியோக்கள் வெளியாகியிருந்தன.

சமூக வலைத்தளங்களில் வெளியான விடியோக்களில், எடப்பாடி பழனிசாமி, முன் இருக்கையில் அமர்ந்திருந்த காரில், செல்லூர் ராஜூ ஏறுவதற்குத் தயாரானார். ஆனால் அதனைப் பார்த்த பழனிசாமி, வேண்டாம் வேண்டாம், வேறு காரில் செல்லுங்கள் என்று கூறினார்.

இந்த விடியோ வைரலாகி, கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட வந்த பழனிசாமி, செல்லூர் ராஜூவை தன்னுடைய காரில் ஏற்ற மறுத்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தது. மேலும், எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜூ மீது அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால், உண்மை அவ்வாறு இல்லை என்றும், பாதுகாப்புக் காரணங்களுக்காகவே வேறு காரில் சென்றதாக செல்லூர் ராஜு விளக்கம் கொடுத்துள்ளார்.

அதாவது, எடப்பாடி பழனிசாமிக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஓய் பிரிவில் இருந்து இசட் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு பாதுகாப்பு அதிகரித்துள்ள காரணத்தால், எடப்பாடி பழனிசாமி இருந்த காரில் பாதுகாப்பு அதிகாரிகள் இருந்ததால்தான், தன்னை காரில் ஏற வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். வேறு காரில் வருமாறும் கூறியதாக செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே காரில் பாதுகாப்பு அதிகாரிகள் இருந்ததால்தான் தன்னை காரில் ஏற்றவில்லை என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest