
சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (57). இவரின் மனைவி ஜெயா (55), மகள் மோனிஷா (30), மகன் ஸ்டாலின் (36), இவரது மனைவி துர்கா (32) சிறுமி நிவேனி சூரியா (3). இவர்கள் குடும்பமாக காரில் கும்பகோணத்திற்கு ஆன்மிகச் சுற்றுலா சென்றுவிட்டு இன்று காலை தஞ்சாவூருக்குத் திரும்பியிருக்கிறார்கள். அப்போது, கும்பகோணம் – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், உதாரமங்கலம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென லோடு ஆட்டோ ஒன்று ராங்க் ரூட்டில் வந்துள்ளது.

இதில் இரு வாகனங்களை ஓட்டியவர்களும் தடுமாற கண்ணிமைக்கும் நேரத்தில் லோடு ஆட்டோவும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. காரில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகே வயலில் விவசாய வேலை செய்தவர்கள் ஓடி வந்தனர். பின்னர் காரில் இருந்தவர்களை மீட்டனர்.
இந்த விபத்தில் ஜெயா, மூன்று வயது சிறுமி நிவேனி சூரியா, குமார், துர்கா ஆகிய நான்கு பேரும் பலியாகினர். மோனிஷா, ஸ்டாலின், லோடு ஆட்டோ டிரைவர் விக்னேஷ் காயம் அடைந்துள்ளனர். இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில், “கும்பகோணத்தில் இருந்து கார் தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்தது. விவசாயப் பணிகளுக்காக நாற்றுக்கட்டுக்களை ஏற்றிக்கொண்டு வந்த லோடு ஆட்டோ ராங் ரூட்டில் வந்துள்ளது.

இதில் இரு வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. வாகனங்கள் மோதிக் கொண்டதும் காருக்குள் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். மீட்புப் பணியில் ஈடுப்பட்டனர். விபத்து குறித்து தாலுகா போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” என்றனர்.