
கனடா நாட்டில், காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளர்கள், புதியதாகத் தூதரகம் ஒன்று திறந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் பகுதிகளை இணைத்து, சீக்கியர்களுக்கென்று காலிஸ்தான் எனும் தனி நாட்டை உருவாக்க வேண்டும் எனும் கொள்கையுடன் காலிஸ்தான் அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த அமைப்பின், தலைவர்கள் சிலர் இந்திய அரசினால் பயங்கரவாதிகள் எனப் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், கனடா நாட்டை தங்களது அறிவிக்கப்படாதத் தலைமையிடமாகக் கொண்டு அவர்கள் செயல்பட்டு வருவதாக, மத்திய அரசு ஏற்கனவே குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின், சர்ரே நகரத்தில், காலிஸ்தான் குடியரசு எனும் பெயரில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தூதரகம் ஒன்றைத் திறந்துள்ளனர்.
இந்தியாவால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்ட ஹர்தீப் சிங் நஜ்ஜார் என்பவரின் தலைமையில் இயங்கி வந்த குருநானக் சீக் குருத்வாராவில், இந்தத் தூதரகம் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், கனடாவில் ஹர்தீப் சிங் நஜ்ஜார் கொல்லப்பட்டபோது, அவரது கொலைக்கு இந்திய அரசுதான் காரணம் என முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடா அரசு குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் உண்டாகத் துவங்கியது.
இத்துடன், காலிஸ்தான் குடியரசு எனும் பெயர் பலகை இடம்பெற்றுள்ள இந்தத் தூதரகத்துக்கு, அந்நாட்டு அரசின் சார்பில் 1,50,000 அமெரிக்க டாலர்கள் நிதி வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், கனடா – இந்தியா இடையிலான உறவு மேலும் மோசமடையக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்தத் தூதரகம் திறக்கப்பட்டதற்கு, கனடாவுக்கான இந்தியாவின் தூதர் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அந்நாட்டு அரசு இத்தகையைச் செயல்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இருப்பினும், கனடாவில் சுமார் 7 லட்சம் சீக்கியர்கள் வசிப்பதால், அவர்களின் வாக்குகளைக் கருத்தில் கொண்டு, அந்நாட்டு அரசு காலிஸ்தான் ஆதரவாளர்களின் செய்லபாடுகளுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை எனக் குற்றம்சாட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!