
உத்தரப் பிரதேசத்தில் சர்யு கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், சிஹாகான் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், கர்குபூரில் உள்ள பிருத்விநாத் கோயிலிலுக்கு புனித நீர் வழங்க ஞாயிற்றுக்கிழமை காரில் 15 பேர் சென்றுகொண்டிருந்தர். அவர்களுடைய கார் சர்யு கால்வாயில் திடீரென கவிழ்ந்தது. இந்த விபத்தில் 11 பேர் பலியாகினர்.
மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கிராமவாசிகள் மற்றும் மீட்புக் குழுக்களின் உதவியுடன் நீரில் மூழ்கிய வாகனத்திலிருந்து 11 சடலங்கள் மீட்கப்பட்டன. பின்னர் அவை உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல்
விபத்தில் பலியானோருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்ததோடு, அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்தார்.
பிரதமர் நிதியுதவி
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.