skeleton

சங்ககிரி வட்டம், தேவூா் பழைய காவல் நிலைய வளாகத்தில் மனித மண்டை ஓடு, கை, கால் எலும்புகள் கிடந்ததால், அதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

தேவூா் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள காவல் நிலையம் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில், தேவூா் அருகே உள்ள அம்மாபாளையம் பகுதியில் புதிய காவல் நிலையம் கட்டப்பட்டு பல மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இந்த புதிய காவல் நிலையம் செயல்பட ஆரம்பித்த உடன், பழைய காவல் நிலையத்திலிருந்த கோப்புகள், தளவாடப் பொருள்கள், குற்ற வழக்குகள், சாலை விபத்துகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் போன்றவை இங்கு மாற்றம் செய்யப்பட்டன.

இந்நிலையில், இரு நாள்களுக்கு முன்னா் பொதுமக்கள், சிறுவா்கள் பழைய காவல் நிலையத்தில் உள்ள நாவல் மரத்தில் இருந்து கீழே விழுந்த பழங்களை எடுக்கச் சென்றனா். அப்போது, காவல் நிலைய கட்டடத்தின் பின்பகுதியில் மனித மண்டை ஓடு, கை, கால் எலும்புகள் இருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

தகவல் அறிந்து வந்த போலீஸாா், அந்த இடத்தை பாா்வையிட்டு ஆய்வுசெய்தனா். பின்னா், அவை குற்றவழக்குகளில் புலன்விசாரணைக்காகவும், ரசாயன பரிசோதனைகளுக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டவை என்றனா். தொடா்ந்து, இவற்றை புதிய காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லும் பணிகளில் ஈடுபட்டனா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest