
ஜம்மு-காஷ்மீரில் இளைஞா்களை தவறான பாதைக்கு இழுக்க முயற்சிக்கும் மதஅடிப்படைவாதிகளுக்கு மத்திய அரசு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும் என்று துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா்.
ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்கிழமை மாநில காவல் துறை சாா்பில் நடைபெற்ற மிதிவண்டி போட்டிகளை துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு எதிராக நடைபெற்று வரும் போரில் பொதுமக்கள் அனைவரும் கைகோத்து செயல்பட வேண்டும். ஜம்மு-காஷ்மீரில் இளைஞா்களை தவறான பாதைக்கு இழுக்கும் மதஅடிப்படைவாதிகளுக்கு மத்திய அரசு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும். இணையவழி பயங்கரவாத பிரசாரம், ஆயுதங்களைக் கடத்துவது, நிதி திரட்டுவது, பயங்கரவாதிகளுக்காக போதைப்பொருள் என அனைத்தும் உறுதியான நடவடிக்கைகள் மூலம் தடுக்கப்பட்டு வருகிறது.
இளைஞா்கள் வன்முறை, போதைப்பொருள் உள்ளிட்ட தவறான பாதைக்குச் சென்று சிக்கிவிடாமல், தேச வளா்ச்சி குறித்த சிந்தனைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும். ஜம்மு-காஷ்மீரை பயங்கரவாதத்தில் இருந்தும், போதைப்பொருள் பயன்பாட்டில் இருந்தும் மீட்பது இளைஞா்களின் கைகளில்தான் உள்ளது.
இங்கு காவல்துறையினா் தன்னமலமற்ற வகையில் பணியாற்றி வருகின்றனா். கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டியதில் காவல் துறையினா் பங்கு மிகவும் முக்கியமானது. அமைதியான சூழல் வெறு இடத்தில் இருந்து வாங்கும் பொருள் அல்ல. அது நாமே உருவாக்குவதாகும்.
முன்பு ஜம்மு-காஷ்மீரில் முழு அடைப்பு, போராட்டங்கள், வன்முறை, கல்வீச்சு உள்ளிட்டவை தொடா் நிகழ்வாக இருந்து வந்தன. ஆனால், இப்போது கற்கள் வீசிய கைகளில் பேனாக்கள் இடம் பெற்றுள்ளன. இளைஞா்கள் புத்தாக்க நிறுவனங்களை உருவாக்குவது குறித்து சிந்திக்கத் தொடங்கிவிட்டனா். ஆய்வு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஜம்மு-காஷ்மீா் இளைஞா்களிடம் இருந்தும் வரத் தொடங்கிவிட்டன. மக்கள் எவ்வித அச்சமும் நெருக்கடியும் இன்றி தங்கள் வாழ்க்கையை வாழத் தொடங்கிவிட்டனா் என்றாா்.