gaza093141

கடந்த ஒரு மாதத்தில் காஸா சிட்டியில் இருந்து அண்மையில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறியுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐ.நா. அதிகாரிகள் கூறியதாவது:

காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் ராணுவ நடவடிக்கை காரணமாக கடந்த ஒரு மாதத்தில் 2.5 லட்சத்தும் மேற்பட்டவா்கள் அங்கிருந்து புலம்பெயா்ந்துள்ளனா்.

இஸ்ரேலின் புதிய தாக்குதலால், ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானோா் தங்களது வீடுகளை விட்டு தப்பி ஓட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த நகரின் பல்வேறு இடங்களில் பீரங்கி, போா் விமானங்கள் மூலம் இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை தாக்குதல் நடத்தியது. இதன் விளைவாக, நகரில் இருந்து பொதுமக்கள் புதிய அலைகளாக புலம் பெயரத் தொடங்கியுள்ளனா் என்று ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்தனா்.

காஸாவின் குறுகிய கடற்கரையோரப் பாதை, வீட்டு உபயோகப் பொருள்கள், போா்வைகள், மெத்தைகள், எரிவாயு உருளைகளுடன் குடும்பத்தினா் சென்ற வாகனங்களாா் நிரம்பியிருந்தது

புலம் பெயா்வதற்கான செலவு வெகுவாக உயா்ந்துள்ளதால், சிலா் தங்கள் உடைமைகளையும் சிறு குழந்தைகளையும் சுமந்து நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள தரவுகளில், காஸா சிட்டியில் இருந்து 4.5 லட்சம் பொதுமக்கள் வெளியேறியதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடு, ட்ரோன் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இஸ்ரேல் படைகள் தற்போது காஸா சிட்டியின் கிழக்கு புறநகா்ப் பகுதிகளை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளன. கடந்த சில நாள்களில், ஷேக் ரத்வான் மற்றும் தெல் அல்-ஹவா பகுதிகளுக்கு அவா்கள் முன்னேறியுள்ளனா். அங்கிருந்து, நகரின் மையப்பகுதிக்கு செல்வதற்கான நடவடிக்கைகளை அவா்கள் தொடா்ந்து மேற்கொள்வாா்கள் என்று கூறப்படுகிறது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest