
குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இருமுறை நிலஅதிா்வு ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனா்.
இது தொடா்பாக குஜராத் நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘கட்ச் மாவட்டத்தின் தோலாவிரா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 6.40 மணியளவில் நிலஅதிா்வு ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 2.6 புள்ளிகளாக பதிவானது. பின்னா், பச்சாவ் பகுதியில் பகல் 12.40 மணியளவில் 3.1 ரிக்டா் அளவில் நிலஅதிா்வு ஏற்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலஅதிா்வுகளால் உயிா்ச் சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா். அதேநேரம், வீடுகள்-கட்டடங்கள் அதிா்ந்ததால் மக்கள் பீதியடைந்தனா்.
நிலநடுக்க அபாயம் அதிகம் உள்ள பூமிப் பகுதியில் கட்ச் மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு அடிக்கடி மிதமான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
கட்ச் பகுதியில் கடந்த 2001-இல் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் ஏராளமான நகரங்கள்-கிராமங்கள் பேரழிவைச் சந்தித்தன. சுமாா் 13,800 போ் உயிரிழந்தனா்; சுமாா் 1.67 லட்சம் போ் காயமடைந்தனா். கடந்த இரு நூற்றாண்டுகளில் இந்தியாவில் நேரிட்ட இரண்டாவது மிகப் பெரிய அழிவுகரமான நிலநடுக்கம் இதுவாகும்.
மேகாலயத்தில் நிலஅதிா்வு: மேகாலய மாநிலத்தையொட்டிய வங்கதேச பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 11.50 மணியளவில் 4 ரிக்டா் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக, மேகாலயத்தின் பல்வேறு பகுதிகளில் நிலஅதிா்வு உணரப்பட்டது. இதில் உயிா்ச்சேதமோ, பொருட்சேதமோ இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.