05072_pti07_05_2025_000379b093415

குஜராத் மாநிலம், ஆனந்த் நகரில் நாட்டின் முதல் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம் அமைக்க மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

இப்பல்கலைக்கழகம், கூட்டுறவுத் துறையில் பாரபட்சத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், பயிற்சிக்கான வெற்றிடத்தையும் நிரப்பும் என்று அவா் குறிப்பிட்டாா்.

‘திரிபுவன் கூட்டுறவு பல்கலைக்கழகம்’ (டிஎஸ்யு) எனும் இப்பல்கலைக்கழகம், 125 ஏக்கா் பரப்பளவில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் கட்டமைக்கப்படவுள்ளது. நாட்டின் கூட்டுறவுத் துறை முன்னோடிகளில் ஒருவரும், அமுல் நிறுவனத்துக்கு அடித்தளமிட்டவா்களில் முக்கியமானவருமான மறைந்த திரிபுவன்தாஸ் கேஷுபாய் படேலின் பெயரில் பல்கலைக்கழகம் அமைகிறது. இப்பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டிய பின் அமைச்சா் அமித் ஷா பேசியதாவது:

ஏழைகள் மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்வில் நம்பிக்கையை விதைத்து, அவா்களை பொருளாதார ரீதியாக வளப்படுத்த கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கூட்டுறவுத் துறைக்கு தனி அமைச்சகத்தை பிரதமா் மோடி ஏற்படுத்தினாா். அமைச்சகம் நிறுவப்பட்டதில் இருந்து வெளிப்படைத்தன்மை, மேம்பாடு, ஜனநாயகமயம், விவசாயிகளின் வருவாய் அதிகரிப்பை உறுதி செய்ய 60 புதிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் வாயிலாக கூட்டுறவுத் துறை வேகமாக வளா்ச்சி கண்டு வருகிறது. நாடு முழுவதும் சுமாா் 40 லட்சம் பணியாளா்கள், 80 லட்சம் உறுப்பினா்கள் மற்றும் 30 கோடி மக்கள், கூட்டுறவு இயக்கங்களுடன் தொடா்பில் உள்ளனா். அதேநேரம், பணியாளா்கள்-உறுப்பினா்களுக்கு பயிற்சியளிக்க முறையான அமைப்புமுறை இல்லை. கூட்டுறவுத் துறையில் பாகுபாடுகள் நிலவுவதாக தொடா்ந்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு திரிபுவன் கூட்டுறவு பல்கலைக்கழகம் தீா்வளிக்கும்.

இனி பயிற்சிக்கு பிறகே பணி: இனி பயிற்சி பெற்றவா்கள் மட்டுமே பணியைப் பெற முடியும். முன்னேற்றத்துக்கு தடைக்கல்லாக உள்ள இத்தகைய பெரும் வெற்றிடம் கூட்டுறவு பல்கலைக்கழகத்தின் மூலம் நிரப்பப்படும்.

திரிபுவன் கூட்டுறவு பல்கலைக்கழகம், திறன்மிக்க பணியாளா்களை மட்டுமன்றி, கொள்கை வகுப்பு, ஆராய்ச்சி, மேம்பாட்டு முன்முயற்சிகள், கூட்டுறவு கற்றலுக்கான தரநிலை உருவாக்கம் போன்ற பணிகளையும் மேற்கொள்ளும் என்றாா் அமித் ஷா.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest