PTI10012025000091B

சர்வதேச எல்லையான ‘சர் க்ரீக்’ பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் உள்கட்டமைப்பு அதிகரித்து வருவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த முயற்சித்தால் வலுவான பதிலடி கொடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் உள்ள ராணுவ தளத்தில் நடைபெற்ற விஜயதசமி விழாவில் சிறப்பு விருந்தினராக ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை கலந்துகொண்டார்.

அப்போது வீரர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

“சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகளுக்கு பிறகும், சர் க்ரீக் பகுதியில் எல்லை தொடர்பான பிரச்சினை தூண்டப்பட்டு வருகிறது. இந்தியா பலமுறை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சித்துள்ளது. ஆனால் பாகிஸ்தானின் நோக்கங்கள் தெளிவாக இல்லை. சர் க்ரீக் எல்லைப் பகுதிக்கு அருகிலுள்ள இடங்களில் சமீபகாலமாக உட்கட்டமைப்பை பாகிஸ்தான் ராணுவம் விரிவுபடுத்தியுள்ளது.

இந்திய ராணுவமும், எல்லைப் பாதுகாப்புப் படையும் (பிஎஸ்எஃப்) இணைந்து நாட்டின் எல்லைகளை உன்னிப்பாக பாதுகாத்து வருகின்றன. சர் க்ரீக் பகுதியில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஏதேனும் தவறான முயற்சி மேற்கொள்ளப்பட்டால், அது வரலாற்றையும் புவியியலையும் மாற்றக்கூடிய ஒரு தீர்க்கமான பதிலடியைப் பெறும். 1965 ஆம் ஆண்டு போரில், இந்திய ராணுவம் லாகூரை அடையும் திறனை வெளிப்படுத்தியது. இன்று 2025, க்ரீக் வழியாக கராச்சிக்கு செல்லும் பாதையை பாகிஸ்தான் நினைவில் கொள்ள வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் குறித்து ராஜ்நாத் சிங் பேசியதாவது:

“ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடுபவர்கள் எங்கு மறைந்திருந்தாலும், அவர்களைக் கண்டுபிடித்து அழிக்கும் ஆற்றல் எங்களிடம் உள்ளது என்பதை நமது ஆயுதப் படையினர் நிரூபித்தனர்.

உலகில் எந்த சக்தியும் எங்கள் இறையாண்மைக்கு சவால் விடுத்தால், நாங்கள் அமைதியாக அமர்ந்திருக்க மாட்டோம் என்பதை இன்றைய இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. பயங்கரவாதமாக இருந்தாலும் சரி, வேறு எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் சரி, அதை எதிர்கொண்டு வெல்லும் திறன் எங்களிடம் உள்ளது. சிந்தூர் நடவடிக்கையின் போது, பாகிஸ்தான் ராணுவத்தினர் லேயிலிருந்து சர் க்ரீக் பகுதி வரை நாட்டின் பாதுகாப்பு அமைப்பை மீற முயற்சித்து தோல்வியடைந்தது.

இந்தியாவின் ஆயுதப் படைகள் பாகிஸ்தானின் வான்பாதுகாப்பு அமைப்பை முழுமையாக தகர்த்தி, எப்போது, எங்கு, எப்படி வேண்டுமானாலும் பாகிஸ்தானுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்த முடியும் என்ற செய்தியை உலகிற்கு அனுப்பியது. எங்களுக்கு முழு வாய்ப்பு இருந்தபோதிலும், நாங்கள் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தோம், ஏனெனில் எங்கள் ராணுவ நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு எதிரான இலக்காகவே வைக்கப்பட்டிருந்தது.

நிலைமையை மோசமாக்குவதோ அல்லது போர் தொடுப்பதோ சிந்தூர் நடவடிக்கையின் நோக்கமாக இல்லை. பயங்கரவாதத்திற்கு எதிரான எங்கள் போராட்டம் தொடர்கிறது.” என்றார்.

Pakistan military infrastructure on Gujarat border increases! Rajnath Singh warns

இதையும் படிக்க : அமெரிக்க அரசு நிர்வாகம் முடக்கம்! என்னென்ன துறைகள் இயங்கும்?

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest