
பீகாரில் ஒருவர் தனது தந்தை உயிருடன் இருக்கும் போதே, அவர் இறந்து விட்டதாக கூறி குடும்ப சொத்தை மகன் விற்பனை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள முஜாபர்பூர் அருகில் இருக்கும் மஹ்மத்பூரை சேர்ந்தவர் ராஜ் நாராயண் தாக்குர்(90). இவர் தற்போது தனது 5-வது மகன் திலிப் தாக்குர் தனக்கு தெரியாமல் குடும்ப சொத்தை ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்துவிட்டதாக கூறி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் முஜாபர்பூர் கோர்ட்டிக்கு வந்தபோது அளித்த பேட்டியில், “எனக்கு இரண்டு சகோதரர்கள் இருக்கின்றனர். எங்களது சொத்து எனது தந்தையின் பெயரில் இருக்கிறது. எங்களுக்குள் இன்னும் சொத்தை முறைப்படி பிரித்துக்கொள்ளவில்லை. வாய்மொழியாக மட்டுமே பிரித்துக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் எனது மகன் திலிப் தாக்குர் நான் இறந்துவிட்டதாக சொல்லி குடும்ப சொத்தை ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்துவிட்டான். நான் உயிரோடு இருக்கிறேனா இல்லையா என்பதை உறுதி செய்யாமல் பத்திர பதிவு துறையில் சொத்தை பதிவு செய்துள்ளனர். இதனால் குடும்பத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே சட்டவிரோதமாக நிலம் விற்பனை செய்யப்பட்டது குறித்து உடனே விசாரணை நடத்தி மோசடியாக நிலத்தை பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். நில பதிவை ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் எனது மகன் மது பழக்கத்திற்கு அடிமையானவன் என்றும், இதற்கு முன்பும் குடிபோதையில் பல சொத்துக்களை விற்பனை செய்து இருக்கிறான் என்றும், குடும்பத்தில் யாரும் தனக்கு சாப்பாடு கொடுக்க மறுக்கிறார்கள் என்று முதியவர் தெரிவித்துள்ளார். முதியவரின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.