
குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட சிறைக் கைதிகளின் விடுதலை குறித்து அனைத்து மாநிலங்களும் பொதுவான சிறை விதிமுறைகளை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
உச்சநீதிமன்றத்தில் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு தாக்கல் செய்த மனுவில், ‘நாட்டில் 70 வயதுக்கு மேற்பட்ட கைதிகள், குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட கைதிகளை, கருணை அடிப்படையில் விடுதலை செய்வதற்கு வழிவகை செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாக், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீ ஆஜராகி, ‘குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகள் குறித்து மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது. இதுதொடா்பாக வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளில், அத்தகைய கைதிகளை சிறந்த முறையில் கவனித்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது மன்னிப்பின் ஒரு பகுதியாக, அத்தகைய கைதிகளை விடுதலை செய்து குறித்து மாநில, யூனியன் பிரதேச அரசுகள் பரிசீலிக்கலாம்’ என்று தெரிவித்தாா்.
இதைத்தொடா்ந்து நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘அனைத்து மாநிலங்களும் பொதுவான சிறை விதிமுறைகளை வெளியிட வேண்டும். அதில் குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட சிறைக் கைதிகளின் விடுதலை குறித்து இடம்பெற வேண்டும்’ என்று தெரிவித்து, மனு மீதான தீா்ப்பை ஒத்திவைத்தது.