
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகில் உள்ள கோழிக்கரை பழங்குடியினர் கிராமத்தில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் இருந்து நேற்று மதியம் முதல் கடுமையான துர்நாற்றம் வீசியிருக்கிறது. சந்தேகமடைந்த பழங்குடிகள் அருகில் சென்று பார்த்துள்ளனர். யானை ஒன்று இறந்து உடல் அழுகி வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த பகுதிக்கு செல்ல வனத்துறையினர் முயற்சி மேற்கொண்ட நிலையில், அந்த பகுதியில் யானை கூட்டம் ஒன்று நடமாடி வந்த காரணத்தால் அருகில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்று காலை கால்நடை மருத்துவர்கள் குழுவுடன் சென்ற வனத்துறையினர், சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். பெண் யானை ஒன்றும் அதன் வயிற்றில் இருந்த பச்சிளம் சிசுவும் பரிதாபமாக இறந்து கிடப்பதை கண்டுள்ளனர். இறப்புக்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
பின்னணி குறித்து தெரிவித்த வனத்துறையினர், ” நீலகிரி வனக்கோட்டம் குன்னூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பர்லியார் , கோழிக்கரை கிராமம் அருகே வனப்பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கர்ப்பிணி யானை ஒன்று அடி சறுக்கி சரிவுப்பகுதியில் இருந்து கீழே விழுந்துள்ளது. அருகில் ஒரு மரத்தின் இடுக்கில் சிக்கி பரிதாபமாக இறந்துள்ளது. வயிற்றில் இருந்த சிசுவும் வெளியே வந்து இறந்துள்ளது. பெண் யானையின் உடலை மீட்டு உடற்கூராய்வு செய்யப்பட்டதில் கீழே தவறி விழுந்து உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 40 வயதுடைய இந்த யானையின் இறப்புக்கான முழுமையான காரணம் குறித்து அறிய தொடர் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம் ” என்றனர்.

‘யானைகளின் முக்கிய வழித்தடங்கள் அமைந்திருக்கும் நீலகிரி மாவட்டத்தின் குன்னூர் மலைச்சரிவு வனப்பகுதியில் நடைபெற்று வரும் முறையற்ற வளர்ச்சிப் பணிகளால் தடம் மாறும் யானைகள் பள்ளத்தாக்குகளில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழக்கும் துயரம் தொடர்ந்து வருகிறது. முறையான ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்பாட்டாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.