
பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தேரா சச்சா சௌதா தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு மீண்டும் 40 நாள்கள் பரோல் வழங்கி ஹரியாணா அரசு உத்தரவிட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள குர்மீத் ராம், 2017 முதல் 14-வது முறையாக பரோலில் வெளிவந்துள்ளார்.
ஹரியாணாவின் சுனாரியா சிறைச் சாலையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை பரோலில் வெளிவந்த குர்மீத் ராம், சிர்சாவின் உள்ள ஆசிரமத்துக்கு சென்றுள்ளார்.
8 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது பிறந்த நாளை ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
14 முறை பரோல்
இந்தாண்டு மட்டும் மூன்றாவது முறையாக குர்மீத் ராமுக்கு பரோல் வழங்கியிருக்கிறது ஹரியாணா அரசு. முன்னதாக, ஏப்ரல் மாதம் 21 நாள்களும் ஜனவரி மாதம் 30 நாள்களும் பரோலில் வெளிவந்துள்ளார்.
கடந்தாண்டு ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக அக்டோபர் மாதம் 21 நாள்கள் பரோலில் வந்துள்ளார். ஆகஸ்ட், ஜனவரி மாதங்களிலும் பரோல் வழங்கப்பட்டிருந்தது.
இதுவரை தண்டனை காலங்களில் 326 நாள்கள் சிறைக்கு வெளியே பரோலில் இருந்துள்ளார்.
ஹரியாணா, பஞ்சாப், தில்லி மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இவரின் ஆதரவாளர்கள் இருக்கும் நிலையில், அந்த மாநிலங்களின் தேர்தலையொட்டி, குர்மீத் ராமுக்கு பரோல் வழங்கப்பட்டிருக்கிறது.
எனினும், தேர்தல் பிரசாரங்களில் பங்கேற்கவும், கூட்டங்களில் உரையாற்றவும், தேர்தலின்போது மாநிலத்தில் தங்குவதற்கும் இவருக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.