pmkanbumani

பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று தீபாவளி பரிசாக ஜி.எஸ்.டி வரியைக் குறைக்கப்போவதாக அறிவித்திருந்தார்.

அதன்படி, ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த ‘ஜி.எஸ்.டி 2.0’ மோடியின் அறிவிப்புடன் இன்று முதல் அமலுக்கு வந்திருக்கிறது.

முன்னதாக, 2017-ல் இந்தியாவில் ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்ட போது, 5 சதவிகிதம், 12 சதவிகிதம், 18 சதவிகிதம், 28 சதவிகிதம் என நான்கு வகை வரிகள் கொண்டு வரப்பட்டன.

ஆவின்

இப்போது, ஜி.எஸ்.டி 2.0-ல் 5 சதவிகிதம், 18 சதவிகிதம் என இரண்டு வகையான வரிகளாகக் குறைக்கப்பட்டிருக்கின்றன.

இதனால், அத்தியாவசிய மற்றும் பயன்பாட்டு பொருள்கள், உணவுப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், வாகனங்கள் ஆகியவற்றில் வரிகள் குறைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில், ஜி.எஸ்.வரி குறைப்புக்குப் பின்னும் தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் தாங்கள் தயாரிக்கும் பால் பொருள்களின் விலையைக் குறைக்காமல் மக்களை ஏமாற்றுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இது குறித்து அன்புமணி தனது எக்ஸ் தளப் பக்க பதிவில், “ஜி.எஸ்.டி வரிக் குறைப்புக்குப் பிறகும் தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் அதன் பால் பொருள்களின் விலைகளைக் குறைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி இன்று காலை நான் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், ஜி.எஸ்.டி வரிக்குறைப்புக்கு ஏற்ற வகையில் ஆவின் பால் பொருள்களின் விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அரசின் சார்பில் ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அவை செய்தியாக ஒளிபரப்பாகி வருகின்றன.

ஆவின் பால் பொருள்களின் விலை குறைக்கப்படவில்லை; இது மக்களை ஏமாற்றும் முயற்சி என்பது தான் உண்மை.

ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கேற்றவாறு பால் பொருள்களின் விலை குறைக்கப்பட வேண்டும். ஆனால், ஆவின் நிறுவனம் அவ்வாறு செய்யவில்லை.

பாமக தலைவர் அன்புமணி
அன்புமணி

மாறாக, ஆவின் பால் பொருள்களின் அதிகபட்ச விற்பனை விலையில் எந்த மாற்றத்தையும் செய்யாத ஆவின் நிறுவனம், வரி எந்த அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளதோ, அதற்கு ஏற்றவாறு அடிப்படை விலையை உயர்த்தியுள்ளது.

எடுத்துக்காட்டாக ஒரு கிலோ நெய்யின் அதிகபட்ச விற்பனை விலை ரூ.700. இதில் அடிப்படை விலை ரூ.625. 12 சதவிகித ஜி.எஸ்.டி வரி ரூ.75 ஆகும்.

ஆவின் நெய் மீதான ஜி.எஸ்.டி வரி 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் மதிப்பு ரூ.31 மட்டும் தான். அதன்படி ஆவின் நெய் ஒரு கிலோ ரூ.656-க்கும் மட்டுமே விற்கப்பட வேண்டும்.

அமுல், நந்தினி போன்ற பொதுத்துறை பால் நிறுவனங்கள் இந்த அடிப்படையில்தான் விலைக்குறைப்பு செய்துள்ளன.

ஆனால், ஆவின் நிறுவனமோ ஒரு கிலோ நெய்யின் அடிப்படை விலையை ரூ.625-லிருந்து ரூ.669 ஆக உயர்த்தி அத்துடன் ரூ.31 ஜி.எஸ்.டி விலை சேர்த்து அதிகபட்ச விலையாக ரூ.700 நிர்ணயித்துள்ளது.

அதே நேரத்தில் ஜி.எஸ்.டி வரிக்குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் இந்த நாளில் விலையைக் குறைத்ததாகக் கணக்குக் காட்டும் நோக்குடன் இன்று முதல் நவம்பர் 30 வரை ஒரு கிலோ நெய்க்கு ரூ.40 தள்ளுபடி வழங்குகிறது.

இந்த தள்ளுபடியும் கூட ஆவின் நெய், பன்னீர் ஆகியவற்றுக்கு குறைந்த அளவில் தரப்படுகிறதே தவிர, பிற பால் பொருள்களுக்குத் தரப்படவில்லை. அவை அதிக விலைக்குத்தான் விற்பனை செய்யப்படுகின்றன.

நவம்பர் மாதத்துடன் இந்தத் தள்ளுபடி ரத்து செய்யப்படும் நிலையில், டிசம்பர் மாதம் முதல் ஆவின் நெய், பன்னீர் ஆகியவற்றின் விலைகள் மீண்டும் உயர்த்தப்படும்.

தி.மு.க அரசின் கீழ் செயல்படும் ஆவின் நிறுவனம் நடத்தும் இந்த நாடகங்கள் அப்பட்டமான திருட்டுத்தனம் ஆகும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest