ANI_20241021074349

புது தில்லி: அமலாக்கத் துறையால் கைது செய்யப்படுபவர்களில் 0.1 சதவிகிதம் பேர் மட்டுமே தண்டனை பெறுவதாக உச்ச நீதிமன்றம் காட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஒரு வழக்கு விசாரணையின்போது, அமலாக்கத் துறையால் நடத்தப்படும் விசாரணை குறித்து வழக்குரைஞர் கூறியதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம், அமலாக்கத் துறையை கடுமையாக விமர்சித்தது.

அமலாக்கத் துறை, பலர் மீது, வழக்குகளைத் தொடர்ந்து, கைது நடவடிக்கைகளையும் எடுத்து, விசாரணையே நடத்தாமல் பல ஆண்டுகளாக, பலரையும் சிறையில் வைத்திருப்பதாக உச்ச நீதிமன்றம் குற்றம்சாட்டியிருக்கிறது.

இந்த ஆண்டு கடந்த ஆறு மாதத்தில் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட 5,892 பேரில், வெறும் 0.1 சதவீதம் பேருக்கு எதிராகவே குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் மோசமான விஷயம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆனாலும், அமலாக்கத் துறையால் கைது செய்யப்படுவர்கள், குற்றவாளிகள் இல்லையென்றாலும், பல வருடங்களாக விசாரணை இல்லாமல் அவர்களுக்கு தண்டனை வழங்குவதில் நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள் என்றும் உச்ச நீதிமன்றம் அமலாக்கத் துறைக்கு சுட்டிக்காட்டியுள்ளது.

குற்றவாளிகள் என ஒருவர் நிரூபிக்கப்படவில்லை, எனினும் ஆண்டுக் கணக்கில் அவரை சிறையில் வைக்கிறீர்கள். வழக்கு விசாரணையே நடத்தாமல் பலரையும் சிறையில் அடைக்கிறீர்கள். ஒருவரை கைது செய்து, அவரை சிறையில் அடைத்து வழக்கை உருவாக்க கால அவகாசம் கேட்கிறீர்கள். எதிர்க்கட்சியினருக்கு எதிராக இந்த பழக்கம் உருவாகியிருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல் நிறுவனம், பூஷண் பவர் மற்றும் ஸ்டீல் லிமிடட் அல்லது பிபீஎஸ்எல் நிறுவனத்தைக் கையகப்படுத்துவது தொடர்பாக மே மாதம் பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு, ஜேஎஸ்டபிள்யுவின் தீர்மானம் சட்டத்துக்கு விரோதமானது என்று குறிப்பிட்டுள்ளது.

ஆனால் ஜூலை மாதம் இரு தரப்பினரும், ஸ்டேட் வங்கி போன்ற பொது கடன் வழங்குநர்களும் தாக்கல் செய்த மனுக்களைப் பரிசீலித்து, அந்த தீர்ப்பு திரும்பப் பெறப்பட்டது; சில உண்மைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது.

இது, அமலாக்கத் துறையின் விசாரணைத் திறன் மீது வைக்கப்பட்டிருக்கும் மிக முக்கிய சந்தேகமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கு விசாரணையின்போது, பிபீஎஸ்எல் தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை குறித்து வழக்குரைஞர் குறிப்பிட்டதைக் கேட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, இங்கேயும் அமலாக்கத் துறை வருகிறதா? என்று கேள்வி எழுப்பினார்.

அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா, யூடியூப்பில், அமலாக்கத் துறை மற்றும் அதன் விசாரணைக்கு எதிராக பதிவு செய்யப்படும் கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, தெரிந்த சில உண்மைகளை தான் இங்கே கூறுவதாகவும், பண மோசடி வழக்கில் ரூ.23,000 கோடி கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், சில அரசியல்வாதிகளின் வீடுகளில் சோதனை நடத்தும்போது, பணம் எண்ணும் இயந்திரங்கள் நின்றுவிடுகின்றன. புதிய இயந்திரங்களைக் கொண்டு வரும் நிலை ஏற்படுகிறது என்று கூறினார்.

இதனைக் கேட்ட நீதிபதி பி.ஆர். கவாய், நான் சமூக ஊடகங்களைப் பற்றி சொல்லவில்லை. தினமும் காலையில் செய்தித் தாள்களைப் படிக்கிறேன் என்று குறிப்பிட்டார்.

அமலாக்கத் துறையால் குற்றம்சாட்டப்படுபவரின் தண்டனை பெறும் விகிதம் எவ்வளவு என்று கேட்டதற்கு, வெகுக் குறைவுதான் என்று பதிலளித்தார். இப்படியே, இரு தரப்புக்கும் இடையே காரசார வாதம் ஏற்பட்டது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest