Prajwal-Revanna

எப்போதும் தொண்டர் படைசூழ, பாதுகாவலர்களின் உதவியோடு வெளியே வரும் முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா, நேற்று நீதிமன்றத்தில் தனியாகவே காணப்பட்டார்.

பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை விடியோ எடுத்து மிரட்டியதாகத் தொடரப்பட்ட பாலியல் வழக்கில் முன்னாள் பிரதமர் தேவெ கௌடாவின் பேரனும், முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.

மிகப்பெரிய அரசியல் பின்னணி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், பிரஜ்வல் ரேவண்ணா, எப்போதும் ஆதரவாளர்களின் புடைசூழ வெளியே வருவார். ஆனால், நேற்று நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்கூட அவருடன் இல்லை.

தனது இக்கட்டான நாள்களை, பிரஜ்வல் ரேவண்ணா தனியாகவே சந்திக்கவிருக்கிறார். நீல நிற சட்டை, ஜீன்ஸ் பேண்டுடன் நீதிமன்றத்துக்கு தனியாக வந்திருந்த பிரஜ்வல் ரேவண்ணா, தனது வழக்குரைஞர்களிடம் எந்தவிதமான தீர்ப்பு வரும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

பிறகு, நீதிபதி தீர்ப்பை வாசித்தபோது, பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி, அவருக்கான தண்டனை விவரங்களை நாளை அறிவிக்கிறேன் என்றார்.

இதைக் கேட்டதும் பிரஜ்வல் ரேவண்ணாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவரது முகம் முழுக்க வேதனையால் துவண்டது. தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டார். பிறகு தன்னுடைய கைகளால் முகத்தை மூடிக்கொண்டார். கண்ணிலிருந்து வெளிப்பட்ட கண்ணீரை அடக்கிக்கொண்டு வெளியே வந்தார். அப்போது அவருடன் குடும்ப உறுப்பினர்கள் ஒருவர் கூட இல்லை என்பதை அங்கிருந்தவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்று வழக்குரைஞர்கள் பிரஜ்வல் ரேவண்ணாவைத் தேற்றிக் கொண்டிருந்தனர். இந்த தீர்ப்பைக் கேட்டு கட்சித் தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஒரு அரசியல் தலைவர் தொடர்புடைய வழக்கில், இவ்வளவு விரைவாகத் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்று அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டனர்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest