
பெரியவர்களை மட்டுமே அதிகம் பாதித்துக்கொண்டிருந்த நீரிழிவு, தற்போது குழந்தைகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும், குழந்தைகளில் நீரிழிவு டைப் 2 கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் தேசிய குழந்தை உரிமைப் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தெரிவித்துள்ளது. தவிர, இந்தப் பிரச்னையை சமாளிக்க மற்றும் வருமுன் தடுக்க, தேசிய குழந்தை உரிமைப் பாதுகாப்பு ஆணையம் ஒரு முக்கிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. அதாவது, சிபிஎஸ்இ பள்ளிகளில் ‘சுகர் போர்ட்’ (Sugar Boards) என்கிற திட்டத்தை அமல்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளது.

இந்தப் பலகையில், மாணவர்கள் தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்ள வேண்டும்; அவர்கள் தினமும் சாப்பிடுகிற ஸ்நாக்ஸ் மற்றும் கூல்ட்ரிங்ஸில் எவ்வளவு சர்க்கரை இருக்கிறது; அதிகப்படியான சர்க்கரை எடுத்துக்கொண்டால் உடலில் வரக்கூடிய பிரச்னைகள் ஆகியவை இருக்கும். தவிர, ஸ்கூல் கேண்டீன்களில் ஆரோக்கியமான உணவுகளையே விற்பனை செய்ய வேண்டும் என்கிற இந்திய உணவு பாதுகாப்பு, தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (FSSAI) இந்த ’சுகர் போர்ட்’ முயற்சியை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
இந்தத் திட்டம் வரவேற்பை பெற்றுவரும் நிலையில் குழந்தைகளுக்கான நீரிழிவு நோய் அதிகரிப்பதற்கான 7 முக்கிய கவலை தரும் காரணங்கள் மற்றும் அதை தடுப்பதற்கு பெற்றோர்கள் இப்போதே செய்ய வேண்டியவைப்பற்றி, நீரிழிவு சிறப்பு மருத்துவரான டாக்டர், வி. மோகன் நம்மிடம் பகிர்ந்துக்கொள்கிறார்.

“குழந்தைகளுக்கும் நீரிழிவு நோய் இனி அரிதான ஒரு பிரச்னையல்ல. இதுவொரு வளர்ந்து வரும் பொது சுகாதாரப்பிரச்னையாக மாறியுள்ளது. இதுவரை டைப் 1 நீரிழிவு, தன்னுடல் தாக்க நோயாக, குழந்தைகளிடையே பொதுவாகக் கண்டறியப்பட்டது. ஆனால், சமீப ஆண்டுகளில், முதிர்ந்தவர்களிடையே காணப்படுகிற டைப் 2 நீரிழிவு, குழந்தைகளிடையேயும் காணப்பட ஆரம்பித்துள்ளது.
இந்தியாவில், குறிப்பாக நகர்ப்புறங்களில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. ஆரோக்கியமற்ற உணவுகள், உடலுழைப்பின்மை மற்றும் குழந்தைகளின் உடல் பருமன் அதிகரிப்பு ஆகியவை இந்தப் போக்கை துரிதப்படுத்துகின்றன. அதே நேரத்தில், உலகளவில் டைப் 1 நீரிழிவு நோய்களின் பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதற்கு மரபணு மற்றும் நோய் எதிர்ப்பு சம்பந்தப்பட்ட காரணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த அதிகரிப்புக்கு காரணமானவற்றைப் புரிந்துகொள்வது, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க முன்கூட்டிய நடவடிக்கைகளை எடுக்க உதவும்’’ என்கிற டாக்டர் மோகன், குழந்தைகளிடையே நீரிழிவு நோய் அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களையும், அவற்றைத் தடுக்க குடும்பங்கள் செய்ய வேண்டியவற்றையும் பற்றி விளக்கமாக பேச ஆரம்பித்தார்.

இந்தக்கால குழந்தைகள் தொலைக்காட்சி, ஸ்மார்ட்ஃபோன்கள், டேப்லெட்டுகள் மற்றும் மொபைல் கேம்களில் முன்பை விட அதிக நேரம் செலவிடுகின்றனர். இந்த டிஜிட்டல் வாழ்க்கைமுறை, உடல் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிக்கு செலவிடப்படும் நேரத்தை பெருமளவு குறைத்துள்ளது. ஒரு நாளைக்கு 60 நிமிட உடல் விளையாட்டு, ரத்த குளுக்கோஸ் அளவை ஒழுங்குப்படுத்தி, இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவும். ஆனால், உடல் இயக்கமின்மை, எடை அதிகரிப்பு மற்றும் இன்சுலின் எதிர்ப்புக்கு வழிவகுக்கிறது. இவை டைப் 2 நீரிழிவுநோய்க்கு முக்கிய காரணிகளாக உள்ளன.
பதப்படுத்தப்பட்ட, அதிக கலோரி மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகள் பல குழந்தைகளின் உணவில் ஆதிக்கம் செலுத்துகின்றன. சர்க்கரை பானங்கள், பொரித்த சிற்றுண்டிகள், வெள்ளை ரொட்டி மற்றும் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் போன்றவை இன்றைய உணவில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை குறைத்தே விட்டன. இந்த உணவுப்பழக்கங்கள் டைப் 2 நீரிழிவு நோய் அபாயத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், டைப் 1 நீரிழிவு நோய் உள்ள குழந்தைகளுக்கு ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை சிக்கலாக்கி விடுகின்றன. வீட்டில் சமைத்த உணவுகள், முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட ஊக்குவிப்பது, பெற்றோர்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்றாகும்.

உடல்பருமன், டைப் 2 நீரிழிவு நோய்க்கு மிகவும் வலுவான ஆபத்தானக் காரணிகளில் ஒன்றாகும். உடல்பருமனால் உடலில் அதிகரிக்கும் கொழுப்பு செல்கள், இன்சுலினின் ரத்த சர்க்கரையை ஒழுங்குப்படுத்தும் திறனைத் தடுக்கின்றன. அதிக எடையுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, இன்சுலின் எதிர்ப்பு உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
BMI கண்காணிப்பு, சமநிலையான உணவு மற்றும் தினசரி உடல் இயக்கம் ஆகியவை ஒவ்வொரு குழந்தையின் வாழ்க்கையிலும் இந்தப் பிரச்னையை ஆரம்பத்திலேயே தீர்க்க உதவும்.
இன்றைய குழந்தைகள், விளம்பரங்களைக் கண்டு, ஆசைப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுகின்றனர். இந்த உணவுகளில் கெட்டுப்போகாமல் இருக்க பயன்படுத்தப்படும் ரசாயனங்கள், வளர்சிதை மாற்ற செயல்களையும் இன்சுலின் ஒழுங்குபடுத்துதலையும் தடுக்கலாம்.
சுற்றுச்சூழல் நச்சில் காற்று மாசுபாடு, ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் அழற்சியுடன் தொடர்புடையது. இவை இரண்டும் வளர்சிதை மாற்ற செயலிழப்புக்கு பங்களிக்கின்றன. பிளாஸ்டிக்கில் உணவை மைக்ரோவேவ் செய்வதைத் தவிர்ப்பது, கரிம உணவுகளைத் தேர்ந்தெடுப்பது மற்றும் உட்புற காற்றின் தரத்தை மேம்படுத்துவது ஆகியவை குழந்தைகளிடையே நீரிழிவு வராமல் தடுப்பதில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

குடும்பத்தில் நீரிழிவு நோய் வரலாறு இருந்தால், குழந்தைக்கும் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு கணிசமாக அதிகரிக்கிறது. குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோய். இதேபோல், டைப் 1 நீரிழிவு நோய்க்கும் வலுவான மரபணு மற்றும் தன்னுடல் தாக்க நோய்கள் காரணமாக உள்ளன.
ஆனால், மரபணுக்கள் பிரச்னையின் ஒரு பகுதி மட்டுமே. வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் இதைத் தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உங்கள் குடும்பத்தின் மருத்துவப் பின்னணியை அறிந்து, கண்காணிப்பு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
பிறக்கும்போதே குறைந்த எடை, கர்ப்ப காலத்தில் தாயின் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை பிற்காலத்தில் நீரிழிவை ஏற்படுத்தலாம். தவிர, தாய்மார்களுக்கு கர்ப்பகால நீரிழிவு இருந்தால், குழந்தைக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம். தாய்மையின் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பது, தாய்ப்பால் கொடுப்பது மற்றும் ஆரம்பகால குழந்தைப் பருவத்தில் நல்ல ஊட்டச்சத்து ஆகியவை ஆரோக்கியமான வளர்சிதை மாற்ற எதிர்காலத்திற்கு அடித்தளமாக அமைகின்றன.

வாழ்கைசார்ந்த பிரச்னைகள் மற்றும் NEET, JEE மற்றும் பிற போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் கடுமையான மனஅழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். இந்தத் தீவிர மனஅழுத்தம், குறிப்பாக நீண்டகாலமாக தொடரும்போது, கார்டிசோல் மற்றும் பிற மனஅழுத்த ஹார்மோன்களின் அளவை உயர்த்தி, இன்சுலின் எதிர்ப்பைத் தூண்டலாம், இது டைப் 2 நீரிழிவு நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. தேர்வு அழுத்தம், தூக்கமின்மை மற்றும் மோசமான உணவுப் பழக்கங்களுடன் இணைந்து, இந்த ஆபத்தை மேலும் அதிகரிக்கிறது. பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள், தியானம், யோகா, வழக்கமான இடைவெளிகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதன் மூலம் மனஅழுத்த மேலாண்மை உத்திகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தவேண்டும்.
• உடற்பயிற்சியை குடும்பத்தின் வழக்கமாக மாற்றவும்.
• முழு, பதப்படுத்தப்படாத உணவுகளைத் தேர்ந்தெடுத்து, சர்க்கரை சிற்றுண்டிகள் மற்றும் பானங்களைகட்டுப்படுத்தவும்.
• டி.வி., போன் போன்ற செயலற்ற பொழுதுபோக்குகளை வெளிப்புற விளையாட்டுகளுடன் மாற்றவும்.
• எடை, BMI மற்றும் இரத்த குளுக்கோஸ் அளவுகளை கண்காணிக்கவும்.

• ஹார்மோன் பிரச்னைகளைத் தூண்டும் பிளாஸ்டிக் பயன்பாடுகளைத் தவிர்க்கவும். இயற்கையானப் பொருட்களைத் தேர்ந்தெடுக்கவும்.
• நல்ல உணவு, ஓய்வு மற்றும் இயக்கத்தின் மதிப்பை அவர்களுக்கு கற்பிக்கவும்.
• ஹார்மோன் சமநிலை மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு தூக்கம் அவசியம்.
• தேர்வு அழுத்தத்தைக் கையாள தியானம், யோகா அல்லது ஆலோசனைகளை அறிமுகப்படுத்தவும், மற்றும் சமநிலையான வாழ்க்கைமுறையை ஊக்குவிக்கவும்.
குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் அதிகரிப்பு ஒரு மருத்துவப்பிரச்னை மட்டுமல்ல… இது குடும்பங்களுக்கு ஒரு வாழ்க்கை முறை எச்சரிப்பாகும். டைப் 1 நீரிழிவுநோயைத் தடுக்க முடியாவிட்டாலும், ஆரம்பகால மேலாண்மை முக்கியமானது. இதற்கிடையில், டைப் 2 நீரிழிவு நோயை வருமுன் தடுக்கலாம்.

குழந்தைகளுக்கிடையேயான நீரிழிவைத் தடுக்க, பெற்றோர்கள் உடனே செயல்பட வேண்டும். அறிகுறிகளுக்காக காத்திருக்க வேண்டாம். இன்றே நடவடிக்கை எடுங்கள்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பள்ளிகளில் அமைத்ததை போன்று தமிழ்நாடு அரசு பள்ளிகளிலும் சர்க்கரை போர்ட் (sugar board) அமைப்பதை அரசு பரிசீலனை செய்யலாம். அதன் மூலம், சர்க்கரை உட்கொள்ளும் அளவு மற்றும் புரிதல் குழந்தைகளுக்கு கிடைக்கும்’’ என்கிறார் டாக்டர் மோகன்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR