1000044448

ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோரம் ஆண்டுதோறும் வாவுபலி பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம். தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள மைதானத்தில் குழித்துறை நகராட்சி சார்பில் நடத்தப்படும் வாவுபலி பொருட்காட்சி இந்த முறை 100-வது ஆண்டாக நடைபெற்றுவருகிறது. கடந்த 9-ம் தேதி தொடங்கிய இந்த பொருட்காட்சியில் விவசாயிகள் விளைவித்த பொருட்களின் கண்காட்சி, செடி மற்றும் மரக்கன்றுகள் கண்காட்சி மற்றும் விற்பனை, மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் திறமையை வெளிப்படுத்தும் கலைத்திறன் படைப்புகளின் கண்காட்சிகள் மற்றும் ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன. 20 நாட்கள் நடைபெறும் வாவுபலி பொருட்காட்சியை காண ஏராளமான பொதுமக்கள் தினமும் வந்து செல்கின்றனர். ஏராளமான பெண்கள் குழந்தைகளும் ஆர்வமுடன் பொருட்காட்சிக்கு வந்துசெல்கின்றனர். 

வட்டமாக நடனமாடிய நைட்டி இளைஞர்கள்

வாவுபலி பொருட்காட்சியை காண மக்கள் கூட்டமாக வந்திருந்த சமயத்தில் சுமார் 7 இளைஞர்கள் ஒரே மாதிரியான நைட்டி அணிந்து கூட்டத்துக்குள் புகுந்து ஆட்டம்போட்டனர். வட்டமாக சுற்றி சுற்றி நடனம் ஆடி அலப்பறை காட்டினர். மேலும், ஆபாசமான முறையில் பொதுமக்களுக்கு இடையூராக நடனமாடியதுடன், அதை வீடியோவும் எடுத்தனர். இளைஞர்களின் செயலால் பெண்கள் அச்சம் அடைந்தனர். அவர்கள் நடனத்தை வீடியோ எடுத்து ரீல்ஸாக பதிவிட்டனர். இளைஞர்களின் செயலுக்கு பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். சிலர் ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

நைட்டி அணிந்து பொருட்காட்சிக்கு சென்ற இளைஞர்கள்

இதற்கிடையே குழித்துறை வாவுபலி பொருட்காட்சி திடலில் ஆபாசமாக நடனமாடியதாகவும், ஆபாச சைகை காண்பித்து பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாகவும் புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் நைட்டி அணிந்து ஆட்டம்போட்ட மார்ஷல், ஷாஜி உள்ளிட்ட ஏழு பேர் மீது களியக்காவிளை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் பெனடிக்ட் தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest