
கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தில், புதியதாக ஒருவருக்கு நிபா பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுவதாக அம்மாநில சுகாதாரத் துறை இன்று (ஜூலை 16) தெரிவித்துள்ளது.
பாலக்காடு மாவட்டத்தில், நிபா வைரஸினால் பாதிக்கப்பட்டு பலியான ஒருவரின் மகனுக்கும், அந்தத் தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுவதாக, கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் இன்று (ஜூலை 16) தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறுகையில், அந்த நபரிடம் பெறப்பட்ட மாதிரிகளைக் கொண்டு மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட சோதனைகளின் மூலம், நிபா வைரஸின் பாதிப்புகள் அவருக்கு ஏற்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.
இருப்பினும், அந்தத் தொற்றை முழுமையாக உறுதிப்படுத்தும் சோதனைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தற்போது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அந்த நபரின் முந்தைய நடமாட்டங்களை அறிந்து ’ரூட் மேப்’ ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பாலக்காட்டில் தற்போது நிபா வைரஸினால் பாதிக்கப்பட்டு 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், நிபா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மூலம் உருவாக்கப்பட்ட தொடர்புப் பட்டியலில் கேரளம் முழுவதும் இருந்து சுமார் 723 பேர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 4-ஆம் வகுப்பு மாணவிக்கு இருமுறை மாரடைப்பு! பள்ளியில் மயங்கி விழுந்து பலி!