
மூளையை தின்னும் அமீபா நோய் என அறியப்படும் ப்ரைமரி அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் தொற்று கேரளாவில் பரவிவருகிறது. கோழிக்கோட்டில் பிறந்து 3 மாதமே ஆன குழந்தை மூளையை தின்னும் அமீபா தாக்கி மரணமடைந்த சம்பவம் இம்மாதம் தொடக்கத்தில் நிகழ்ந்தது. இம்மாதம் அமீபா தொற்றின் தாக்கம் அதிகமாக பதிவாகி உள்ளது. மூளையை தின்னும் அமீபா தொற்று பாதித்த 71 பேர் இப்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். அதில் இம்மாதம் மட்டும் 24 பேருக்கு புதிதாக அமீபா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூளையை தின்னும் அமீபா பரவலால் இந்த ஆண்டு மொத்தம் 19 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதில் இம்மாதம் 9 பேர் மரணம் அடைந்துள்ளனர். சுமார் 20 நாட்களுக்குள்ளாகவே 24 பேர் தொற்று பாதித்து கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதும், 9 பேர் மரணமடைந்துள்ளதும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கால்நடைகளை குளிப்பாட்டும் குளங்களிலும், பாசிகள், மாசு கலந்த தண்ணீர் நிறைந்த குளங்களிலும் இவ்வகை அமீபாக்கள் காணப்படுவதாக சுகாதாரத்துறை எச்சரித்து வருகிறது. இப்போது வீடுகளுக்கு அருகே உள்ள கிணறுகளிலும் இவ்வகை அமீபா கண்டறியப்பட்டுள்ளது. குளங்களிலும், கிணறுகளிலும் குளோரினேசன் செய்வதன் மூலம் இவ்வகை அமீபா பரவலை கட்டுப்படுத்த முடியும். தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, கழுத்து விரைப்பு, வலிப்பு போன்றவை இந்நோய் தொற்றியுள்ளதற்கான அறிகுறிகளாகும்.

மூளையை தின்னும் அமீபா தொற்று பரவி குறித்த கேள்விக்கு சட்டமன்ற கூட்டத்தில் கேரள சுஜாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பதிலளித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், “அமீபிக் மூளைக்காய்ச்சல் அரிதான நோய் ஆகும். அனைத்து நீர்நிலைகளிலும் அமீபாக்கள் உள்ளன. 2016-ம் ஆண்டு கேரளாவில் அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் ரிப்போர்ட் செய்யப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஒன்று, இரண்டு தொற்றுகள் கண்டறியப்பட்டன. இந்தியாவில் மூளைக்காய்ச்சல் மரணங்கள் நிறைய நடக்கின்றன. உலக அளவில் 45 முதல் 50 சதவிகிதம் மூளை காய்ச்சல் மரணங்கள் கண்டறியப்படுகின்றன. இந்தியாவில் 25 முதல் 30 சதவிகிதம் மூளைக்காய்ச்சல் மரணங்கள் மட்டுமே கண்டறியப்படுகின்றன. 70 சதவிகிதம் மூளைக்காய்ச்சல் மரணங்கள் எதனால் நடந்தன என்பது கண்டறியப்படாமலே உள்ளது.

2023-ல் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட பிறகு சுகாதாரத்துறை ஒரு தீர்மானம் எடுத்தது. அதன்படி அனைத்து மூளைகாய்ச்சல் மரணங்களும் ரிப்போர்ட் செய்யப்படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து அனைத்து அமீபா காய்ச்சல்களும் பதிவுசெய்யப்பட்டு வருகிறது. அமீபாவை கண்டுபிடிக்கும் பி.சி.ஆர் டெஸ்ட் லேப்கள் முன்பு சண்டிகரிலும், புதுச்சேரியிலும் இருந்தன. இப்போது கேரளாவிலும் உள்ளது. அமீபா மூளைக்காய்ச்சலுக்காக சிகிச்சைக்காக வழிகாட்டி நெறிமுறைகள் கேரளாவில் உள்ளன. அந்த வழிமுறையை இந்தியாவில் முதன் முதலில் ஏற்படுத்தியது கேரளா மாநிலமாகும். இந்த நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும் வழிகாட்டி நெறிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது தொற்று நோய் அல்ல” என்றார்.