1000048223

1925-ம் ஆண்டு விஜயதசமி தினத்தில் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கேரளா மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன.

விஜயதசமி தினத்தை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரசாராக் ஆக (முழுநேர ஊழியராக) பணிபுரிய உள்ளதாக அறிவித்திருந்தார் கேரள மாநில விஜிலென்ஸ் அண்ட் ஆன்டிகரப்ஷன் பிரிவு டி.ஜி.பி-யாக இருந்து ஓய்வுபெற்றவர் ஜேக்கப் தாமஸ்.

போலீஸ் டி.ஜி.பி பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் 2021-ல் பா.ஜ.க-வில் சேர்ந்தார் ஜேக்கப் தாமஸ். இந்த நிலையில்தான் அவர் ஆர்.எஸ்.எஸ் பிரசாரகராக மாறியிருக்கிறார்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் பள்ளிக்கரையை அடுத்த குமாரபுரத்தில் பதசஞ்சலன் எனப்படும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இதில் முன்னாள் டி.ஜி.பி ஜேக்கப் தாமஸ் ஆர்.எஸ்.எஸ் கணவேஷ் சீருடை அணிந்து அந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

ஆர்.எஸ்.எஸ் சீருடையில் முன்னாள் டி.ஜி.பி ஜேக்கப் தாமஸ்

அதில் அவர் பேசுகையில்,

“ஒவ்வொரு தனி மனிதர்களுக்கும் சக்தி அளிப்பது தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் லட்சியம். உடல் பலமும், மனரீதியான பலமும், செயற்கை நுண்ணறிவு, சமூக வலைத்தள பலமும் நமக்கு வேண்டும். பல்வேறு சக்திகளை பெறும் போது இந்த நாடு அதிக பலம் பெறும். நம் தேசத்தில் அனைவரையும் சக்திமிக்கவர்களாக மாற்றும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ் ஆகும்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு சாதி இல்லை, மதம் இல்லை, மொழி பேதம் இல்லை, பிரதேச பேதம் இல்லை. அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ் செயல்பட்டு வருகிறது.

பிரிட்டிஷ் ஆட்சி, அதற்கு முன்பு முகலாயர்களின் ஆட்சியும் இருந்தது. நாடு மிகவும் பலவீனமாக இருந்த சமயத்தில் 1925-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்பட்டது.

சுதந்திரம் வேண்டும், வெற்றி வேண்டும், நாடு வேண்டும் என்பதற்காக விஜயதசமி தினத்தில் ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்பட்டது.

தர்மத்தின் பக்கம், சத்தியத்தின் பக்கம் ஸ்வயம் சேவகர்கள் நிற்க வேண்டும். அதர்மத்தை எதிர்க்க வேண்டும், தவற்றையும், பலவீனத்தைச் சரிசெய்வதும் ஸ்வயம் சேவகர்களின் கடமையாகும்” என்றார்.

ஆ.எஸ்.எஸ் பிரசாரகராக மாறிய முன்னாள் டி.ஜி.பி ஜேக்கப் தாமஸ்
ஆ.எஸ்.எஸ் பிரசாரகராக மாறிய முன்னாள் டி.ஜி.பி ஜேக்கப் தாமஸ்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜேக்கப் தாமஸ், “ஆர்.எஸ்.எஸ் நாட்டை ஒன்றுபடுத்தும் அமைப்பு. அவர்கள் தங்கம் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றில் ஈடுபடமாட்டார்கள்.

கேரளாவில் அதிகமாக கேட்கும் பணம் மோசடிகளிலும் அவர்கள் ஈடுபடமாட்டார்கள். நாட்டின் முன்னேற்றத்துக்காக பாடுபடுவது மட்டுமே அவர்களின் லட்சியம்.

ஆர்.எஸ்.எஸ் மதம் பார்ப்பது இல்லை என்பதற்கு நானே சாட்சி. அனைவரையும் அரவணைக்கும் என்பதால்தான் கிறிஸ்தவரான நான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் முழுநேர ஊழியராக மாறியுள்ளேன்” என்றார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest