
கேரள முன்னாள் முதல்வரும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான அச்சுதானந்தன் (வயது 101) வயது மூப்பு காரணமாக திங்கள்கிழமை காலமானார்.
ஏற்கெனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு கடந்த ஜூன் 23 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு மாதமாக வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்ததது. அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து இன்று பிற்பகல் கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்றனர்.
இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி பிற்பகல் 3.20 மணிக்கு அச்சுதானந்தன் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலப்புழாவில் உள்ள அச்சுதானந்தன் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படும் அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக செவ்வாய்க்கிழமை முழுவதும் வைக்கப்படவுள்ளது. தொடர்ந்து, புதன்கிழமை இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1940 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான அச்சுதானந்தம், சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று பலமுறை சிறைக்கு சென்றுள்ளார். 5 ஆண்டுகள் சிறையிலும் 4 ஆண்டுகள் தலைமறைவாகவும் இருந்துள்ளார்.
1957 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றார். பின்னர், 1964 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வெளியேறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய 32 தலைவர்களில் இவரும் ஒருவர். (32 தலைவர்களில் 31 பேர் ஏற்கெனவே உயிரிழந்த நிலையில், உயிருடன் இருந்த கடைசி தலைவர் அச்சுதானந்தனும் தற்போது காலமானார்)
தொழிற்சங்கவாதியாக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய அச்சுதானந்தன், கேரளத்தின் மிக வயதான முதல்வராக 2006 முதல் 2011 வரை பதவி வகித்தார்.
தனது 50 ஆண்டுகள் அரசியல் வாழ்க்கையில் மாநிலத்தின் பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளார். 3 முறை எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார்.
1967 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் 7 முறை கேரள சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பினராயி விஜயனின் வெற்றிக்காக தீவிரப் பிரசாரத்தை அச்சுதானந்தன் மேற்கொண்டார்.
பின்னர் வயது மூப்பு காரணமாக 2019 ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் இருந்து விலகிய அச்சுதானந்தன் ஓய்வில் இருந்தார்.