VS-Achuthananthan-cremated-ed

கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் உடல், புன்னப்ரா தியாகிகள் நினைவிடத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

திருவனந்தபுரத்தில் இருந்து பிற்பகல் வரவேண்டிய உடல், வழிநெடுக இருந்த கூட்டம் காரணமாக தாமதமாக வந்ததால், இரவு 9 மணியளவில் அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, அவரின் மகன் வி.ஏ. அருண் குமார் தகன மேடைக்கு மரியாதை செலுத்தி பூத உடலுக்கு எரியூட்டினார்.

கேரள முன்னாள் முதல்வரும் மார்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன், உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்புக் காரணமாக திங்கள்கிழமை (ஜூலை 21) காலமானார்.

அவரின் உடல் திருவனந்தபுரத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்ட பின்னர், செவ்வாய்க்கிழமை தலைமைச் செயலக தர்பார் மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு முதல்வர் பினராயி விஜயன், கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, திருவனந்தபுரத்தில் இருந்து ஆலப்புழாவின் புன்னப்ராவில் உள்ள அவரது பூர்வீக வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை முற்பகல் அலங்கரிக்கப்பட்ட வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலை வழியாக உடல் கொண்டுசெல்லப்பட்டாலும், மழையையும் பொருட்படுத்தாது, வழிநெடுக மக்கள் கூடியிருந்து அஞ்சலி செலுத்தி, அவரை வழியனுப்பிவைத்தனர். இதனால், 150 கிலோ மீட்டரைக் கடக்க 22 மணிநேரங்கள் ஆனது.

பிற்பகல் 2.30 மணியளவில் அச்சுதானந்தனின் பூர்விக வீட்டில் அவரின் உடல் வைக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் பலர் திரண்டு வந்து தங்கள் இறுதி மரியாதையை செலுத்தினர். தொடர்ந்து இரவு 9.10 மணியளவில் புன்னப்ரா தியாகிகள் நினைவிடத்தில் அலங்கரிக்கப்பட்ட தகன மேடையில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

கேரள முதல்வர் பினராயி விஜயன், மார்க்சிய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி உள்ளிட்டோர் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.

இதையும் படிக்க | சபரிமலைக்கு நடந்துசென்ற முதல் கம்யூனிஸ்ட் முதல்வர் அச்சுதானந்தன்!

Former Kerala Chief Minister V.S. Achuthanandan cremated

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest