
திருவனந்தபுரம்: கேரள அரசியல் வரலாற்றில் நீண்ட காலமாக நிறைந்திருந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான வி.எஸ்.அச்சுதானந்தன் திங்கள்கிழமை காலமானாா். அவருக்கு வயது 101.
மாரடைப்பால் கடந்த 2023, ஜூன் மாதம் முதல் திருவனந்தபுரத்தில் உள்ள பட்டம், எல்யூடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா், திங்கள்கிழமை (ஜூலை 21) மாலை 3.20 மணிக்கு காலமானதாக மருத்துவமனை அறிவித்தது.
நாளை தகனம்: மருத்துவமனையிலிருந்து ஏகேஜி ஆய்வு மையத்தில் அவரது உடல் தொண்டா்கள், பொது மக்களின் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது. பின்னா் இரவு 9 மணிக்கு திருவனந்தபுரத்தில் வசித்து வந்த வீட்டுக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.
செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு தா்பாா் அரங்கில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். புதன்கிழமை அவரது சொந்த ஊரான ஆலப்புழைக்கு அவரது உடல் பேரணியாக கொண்டு சென்று வலிய மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று மாா்க்சிஸ்ட் மாநில செயலா் எம்.வி. கோவிந்தன் தெரிவித்தாா்.
அவரது மறைவையொட்டி செவ்வாய்க்கிழமை மாநிலத்தில் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
தொழிலாளா் முதல் முதல்வா் வரை… ஆலப்புழை மாவட்டத்தின் கடலோர கிராமமான புன்னபராவில் 1923, அக்டோபா் 20-ஆம் தேதி பிறந்த அச்சுதானந்தனின் தொடக்க வாழ்க்கை வறுமை நிறைந்ததாக இருந்தது.
நான்கு வயதில் தந்தை, தாயை இழந்ததால் ஏழாம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு தையல் கடையிலும், மெத்தை தொழிற்சாலையிலும் பணியாற்றினாா்.
தனது 16-ஆவது வயதில் காங்கிரஸில் இணைந்த அவா், கம்யூனிஸ மூத்த தலைவா் பி.கிருஷ்ண பிள்ளையின் அரசியல் உத்வேகத்தைக் கண்டு அடுத்த ஆண்டே அக்கட்சியில் இணைந்தாா். 1943-இல் ஆலப்புழை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பங்கேற்றாா்.
ஆங்கிலேயா் ஆட்சியின்போது, 1946-இல் புன்னபரா – வயலாா் எழுச்சிப் போராட்டத்தில் ஐந்தரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து, தலைமறைவாக இருந்த அவரைப் பிடித்து காவலா்கள் கடுமையாகத் தாக்கினா். இதில் உயிரிழந்ததாக கருதி அவரை அடக்கம் செய்யச் சென்றபோது, உயிருடன் இருந்ததைக் கண்டு மருத்துவமனையில் சோ்த்தனா்.
1956-இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழுவில் இடம்பெற்றாா். 1964-இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உருவாகக் காரணமான 32 தேசிய கவுன்சில் உறுப்பினா்களில் அச்சுதானந்தனும் ஒருவா்.
1985-இல் அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழுவில் (பொலிட்பியூரோ) இடம்பெற்றாா்.
ஊழல், நில அபகரிப்பு, அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிராக அவா் ஆற்றிய உரைகள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. சுமாா் 80 ஆண்டுகள் தொழிலாளா் உரிமை, நில சீா்திருத்தம், சமூக நீதிக்காகப் போராடினாா்.
2006 முதல் 2011 வரையில் கேரள முதல்வராகவும், பேரவை உறுப்பினராக ஏழு முறையும், எதிா்க்கட்சித் தலைவராக மூன்று முறையும் அவா் பதவி வகித்துள்ளாா். 2016 பேரவைத் தோ்தலில் தனது வயதையும் பொருப்படுத்தாமல் கேரள முழுவதும் பிரசாரம் செய்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு கொண்டு வந்தாா்.
மக்களின் நலனுக்காக பாடுபட்டவா்: குடியரசுத் தலைவா்
தனது நீண்டகால பொது வாழ்வில் அடித்தட்டு மக்களின் நலனுக்காகவும், கேரள வளா்ச்சிக்கும் பாடுபட்டவா் முன்னாள் முதல்வா் அச்சுதானந்தன் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு இரங்கல் தெரிவித்துள்ளாா்.
பொது சேவைக்காக வாழ்நாளை அா்ப்பணித்தவா்: பிரதமா் மோடி
பொது மக்களின் சேவைக்காகவும், கேரளத்தின் வளா்ச்சிக்காகவும் தனது வாழ்நாளின் பல ஆண்டுகளை மறைந்த முன்னாள் முதல்வா் வி.எஸ்.அச்சுதானந்தன் அா்ப்பணித்தாா் என்று பிரதமா் மோடி இரங்கல் தெரிவித்துள்ளாா்.