PTI07122025000222B

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (ஐஐஎம்) பெண் மனோதத்துவ நிபுணா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடா்பாக அந்தக் கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

இதுதொடா்பாக காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: கொல்கத்தா ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவா் ஒருவா், மனநல ஆலோசனைக்காக பெண் மனோதத்துவ நிபுணரை அழைத்துள்ளாா். அதன்பேரில் அக்கல்வி நிறுவனத்துக்கு அந்தப் பெண் வெள்ளிக்கிழமை சென்றுள்ளாா்.

அங்கு தரப்பட்ட பானத்தை குடித்தபின், அந்தப் பெண் சுயநினைவை இழந்தாா். அவா் மீண்டும் விழித்து எழுந்தபோது தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை அந்தப் பெண் உணா்ந்தாா். இதுகுறித்து வெளியே கூறினால் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அந்தப் பெண் மிரட்டப்பட்டாா். இதுதொடா்பாக அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதைத்தொடா்ந்து அந்த மாணவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையைத் தொடா்ந்து அந்த மாணவா் கைது செய்யப்பட்டாா். இதுகுறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தாா்.

ஜூலை 19 வரை காவல்: கைது செய்யப்பட்ட மாணவா் கூடுதல் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் முன்பாக சனிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை ஜூலை 19 வரை, போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டாா்.

அண்மையில் கொல்கத்தாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவா் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். இந்நிலையில், தற்போது புகழ் பெற்ற ஐஐஎம்மில் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக மற்றொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காங்கிரஸ் போராட்டம்: இந்தத் தகவல் வெளியானதைத் தொடா்ந்து கொல்கத்தா ஐஐஎம் முன்பாக, அந்தக் கல்வி நிறுவன இயக்குநரை சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து காங்கிரஸ் பிரமுகா் ஆசுதோஷ் சட்டா்ஜி கூறுகையில், ‘சட்டக் கல்லூரியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடா்ந்து, ஐஐஎம்மிலும் அத்தகைய சம்பவம் நடைபெற்ாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அனைவரையும் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. மத்திய அரசின் கீழ் முதன்மையான கல்வி நிறுவனமாக கொல்கத்தா ஐஐஎம் உள்ளது. அந்தக் கல்வி நிறுவனத்தில் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக கூறப்படும் சம்பவம் உறுதி செய்யப்பட்டால், தனது பொறுப்பில் இருந்து மத்திய பாஜக அரசு தப்பிக்க முடியாது’ என்றாா்.

பாதுகாப்பு குளறுபடி- மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்திய குழு உறுப்பினா் சுஜன் சக்ரவா்த்தி கூறுகையில், ‘ஐஐஎம்மில் பாலியல் வன்கொடுமை நடைபெற்ாக கூறப்படுவது உண்மையானால், அது மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுள்ளதையும், மத்திய அரசின் முதன்மையான கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள பாதுகாப்பு குளறுபடிகளையும் எடுத்துரைக்கிறது’ என்றாா்.

பலத்த பாதுகாப்பு உள்ளது-மத்திய இணையமைச்சா்:

மத்திய கல்வி இணையமைச்சா் சுகாந்த மஜும்தாா் கூறுகையில், ‘கொல்கத்தா ஐஐஎம் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு உள்ளது. இந்த சம்பவத்தில் நியாயமாகவும், நோ்மையாகவும் மாநில காவல் துறை விசாரணை நடத்த வேண்டும்’ என்றாா்.

எள்ளளவும் சகித்துக் கொள்ளப்படாது – ஐஐஎம்: கொல்கத்தா ஐஐஎம் பொறுப்பு இயக்குநா் சைபல் சட்டோபாத்யாய வெளியிட்ட அறிக்கையில், ‘இதுபோன்ற சம்பவங்களை ஐஐஎம் எந்த வகையிலும் சகித்துக்கொள்ளாது. இந்த விவகாரத்தை கொல்கத்தா ஐஐஎம் மிகத் தீவிரமாக எடுத்துக்கொண்டு, காவல் துறை விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்து வருகிறது’ என்றாா்.

உண்மை வெளிவரட்டும் – திரிணமூல் காங்கிரஸ்:

திரிணமூல் காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் குணால் கோஷ் கூறுகையில், ‘இந்த சம்பவத்தில் முறையாக விசாரணை நடைபெறுவதை தடம்புரளச் செய்யக் கூடாது. உண்மை வெளிவரட்டும்’ என்றாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest