madurai_aadhinam1

இரு சமூகத்தினா் இடையே பகையைத் தூண்டும் வகையில் பேசியதாக மதுரை ஆதீனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், மதுரை முதன்மை அமர்வு அவருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை சேலம் ரவுண்டானா பகுதியில் கடந்த மே 2-ம் தேதி சென்னை நோக்கி மதுரை ஆதீனம் வந்த காரும், சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற காரும் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் இருவரது காரிலும் லேசான சேதம் ஏற்பட்டது. இது தொடர்பாக மதுரை ஆதீனம் பேசியது, இரு சமூகத்தினரிடையே பகையைத் தூண்டும் விதத்தில் இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளின் கீழ் சென்னை சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இதையடுத்து, மதுரை ஆதீனம் சார்பில் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மதுரை ஆதீனத்துக்கு முன் ஜாமீன் வழங்க விதிக்கப்பட்ட நிபந்தனைகளின் விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, மதுரை ஆதீனம், 60 வயதுக்கு மேற்பட்டவர் என்பதால் அவர் இருக்கும் இடத்துக்குச் சென்றுதான் காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும். காவல்துறையின் விசாரணைக்கு மதுரை ஆதீனம் ஒத்துழைக்க வேண்டும்.

ஒருவேளை, மதுரை ஆதீனம் தலைமறைவானால் வழக்குப் பதிவு செய்யவும் முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், ரூ.10 ஆயிரத்துக்கான இரு நபர் ஜாமீனை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சாலை விபத்து நேரிட்டது குறித்து, மே 3-ஆம் தேதி சென்னை காட்டாங்கொளத்தூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய மதுரை ஆதீனம், தன்னை உளுந்தூா்பேட்டை பகுதியில் காரை ஏற்றி ஒரு கும்பல் கொலை செய்ய முயன்றதாக குற்றஞ்சாட்டினாா்.

இந்நிலையில், சென்னை அயனாவரத்தைச் சோ்ந்த உயா்நீதிமன்ற வழக்குரைஞா் ராஜேந்திரன், கடந்த 24-ஆம் தேதி சென்னை காவல் ஆணையருக்கு ஒரு புகாா் மனுவை அனுப்பினாா்.

அதில், ‘உளுந்தூா்பேட்டையில் நடந்தது சாலை விபத்து என்பது சந்தேகத்துக்கு இடமின்றி கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் காவல் துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இரண்டு சமூகத்தினரிடையே விரோதத்தை தூண்டும் வகையில், சிறுபான்மையினா் குறித்து தவறான கருத்துகளைப் பரப்பிய மதுரை ஆதீனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்தப் புகாா் தொடா்பாக சென்னை கிழக்கு மண்டல சைபா் குற்றப் பிரிவு போலீஸாா், மதுரை ஆதீனம் மீது தவறான தகவலை பரப்புதல், இரு சமூகத்தினருக்கு இடையே பகையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரப்பட்டிருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியிருக்கிறது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest