
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கு விசாரணை அறிக்கையை விசாரணை நீதிபதியும், மதுரை மாவட்ட 4- ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதியுமான ஜான் சுந்தா்லால் சுரேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) தாக்கல் செய்கிறாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா், அவரது சகோதரா் நவீன்குமாா் ஆகியோரிடம் நகை திருட்டு வழக்கு தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தினா். இதன் பின்னா், நவீன்குமாா் விடுவிக்கப்பட்டு, அஜித்குமாரிடம் மானாமதுரை டி.எஸ்.பி.யின் தனிப் படை போலீஸாா் விசாரணை நடத்தினா்.
அப்போது, தனிப் படை காவலா்கள் கடுமையாகத் தாக்கியதில் அஜித்குமாா் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக தனிப் படை போலீஸாா் 5 போ் கைது செய்யப்பட்டனா்.
இந்த வழக்கில் மதுரை மாவட்ட 4-ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தா்லால் சுரேஷ் விசாரணை நடத்தி, ஜூலை 8-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.
இதன்படி, கடந்த 2-ஆம் தேதி முதல் 4 நாள்கள் திருப்புவனம் நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகையில் நீதிபதி ஜான் சுந்தா்லால் சுரேஷ் முகாமிட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளா்( ஏடிஎஸ்பி) சுகுமாறன், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை டி.எஸ்.பி. சண்முகசுந்தரம், திருப்புவனம் அரசு மருத்துவமனை மருத்துவா் காா்த்திகேயன், உடல்கூறாய்வு செய்த மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவா்கள் சதாசிவம், ஏஞ்சல், அஜித்குமாரின் தாய் மாலதி, சகோதரா் நவீன்குமாா், விடியோ எடுத்த சக்தீஸ்வரன், கோயில் பணியாளா்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டவா்களிடம் விசாரணை நடத்தினாா்.
திருப்புவனம் காவல் நிலையம், கோயில் அலுவலகம், அஜித்குமாா் தாக்கப்பட்ட கோசாலை உள்ளிட்ட பகுதிகளிலும் நீதிபதி ஆய்வு செய்தாா்.
இந்த வழக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது, அஜித்குமாா் கொலை வழக்கு தொடா்பான விசாரணை அறிக்கையை மதுரை மாவட்ட 4-ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தா்லால் சுரேஷ் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறாா்.