1002184395

கோவை தொண்டாமுத்தூர், நரசீபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. அதில் வலம் வரும் ஒற்றை ஆண் காட்டு யானைக்கு அந்தப் பகுதி மக்கள் ‘ரோலக்ஸ்’ என்று பெயரிட்டுள்ளனர். ரோலக்ஸ் யானை விவசாய நிலங்களை சேதப்படுத்தி, மனிதர்களை தாக்குவதாக உள்ளூர் வாசிகள் புகார் எழுப்பி வருகிறார்கள்.

கோவை யானை

தொடர்ந்து ரோலக்ஸ் யானையை பிடித்து வேறு பகுதியில் விட வேண்டும் என்று அந்த மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து வனத்துறையினர் அந்த யானையை பிடிக்க முடிவு செய்தனர்.

இதற்காக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து நரசிம்மன், முத்து, கபில்தேவ் ஆகிய 3  கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டன. கடந்த ஒரு வாரமாக ரோலக்ஸ் யானை பிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக வனத்துறை சார்பில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.

ரோலக்ஸ் யானை

ஆனைமலை புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் விஜயராகவன், ஓய்வு பெற்ற வனக் கால்நடை மருத்துவர் மனோகரன் ஆகியோர் மூலம் ரோலக்ஸ் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் ரோலக்ஸ் அவர்களிடம் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது.

இந்நிலையில் ரோலக்ஸ் யானை இன்று அதிகாலை அங்குள்ள ஒரு வாழை தோட்டத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக மருத்துவக் குழு அங்கு விரைந்துள்ளனர். மருத்துவர் விஜயராகவன் யானைக்கு மயக்க ஊசி செலுத்த முயற்சி செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த யானை மருத்துவர் விஜயராகவனை  தும்பிக்கையால் தள்ளி தாக்க முயற்சித்துள்ளது.

மருத்துவர் விஜயராகவன்

அருகே இருந்த வனத்துறை ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு யானையை விரட்டி மருத்துவரை மீட்டனர். அவருக்கு முதுகில் லேசான எலும்பு முறிவும், இடது கை விரலில் காயம்  ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest