
நாடு முழுவதும் இணையத்தள குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நன்றாகப் படித்து உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் கூட சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி விடுகின்றனர். கோவையைச் சேர்ந்த பிரபல டாக்டர் ஒருவர் சைபர் குற்றவாளிகளிடம் சிக்கி ரூ.2.9 கோடியை இழந்துள்ளார். அவரை சைபர் குற்றவாளிகள் டிஜிட்டல் முறையில் கைது செய்து இப்பணத்தை பறித்துள்ளனர். 50 வயதாகும் அந்த டாக்டருக்கு கடந்த மாதம் 27ம் தேதி மர்ம நம்பரில் இருந்து போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தான் மும்பை சைபர் க்ரைம் பிரிவு போலீஸில் இருந்து பேசுவதாகத் தெரிவித்துள்ளார்.

டாக்டர் சைபர் குற்றத்தில் ஈடுபட்டு இருப்பதாக போனில் பேசிய நபர் தெரிவித்தார். டாக்டர், தான் எந்த வித குற்றத்திலும் ஈடுபடவில்லை என்று தெரிவித்தார். ஆனால் நீங்கள் இணையதளத்தின் வழியே குற்றத்தில் ஈடுபட்டு இருப்பதாக போனில் பேசியவர் தெரிவித்தார். அதோடு டாக்டரின் வங்கிக்கணக்கு விபரங்களை கேட்டுத்தெரிந்து கொண்ட குற்றவாளிகள் விசாரணை முடியும் வரை வங்கிக்கணக்கில் இருக்கும் பணத்தை தாங்கள் சொல்லும் வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்யவேண்டும் என்று மிரட்டினர். மேலும் விசாரணை நடைபெறுவதால் உங்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து இருப்பதாகவும், வெளியில் எங்கும் செல்லக்கூடாது என்றும், பணத்தை டிரான்ஸ்பர் செய்யவில்லையெனில் உங்களையும், உங்களது குடும்பத்தினரையும் நேரில் வந்து கைது செய்து நடவடிக்கை எடுப்போம் என்று கூறி மிரட்டினர்.
இதனால் பயந்த டாக்டர் தனது வங்கிக்கணக்கில் இருந்த ரூ.2.9 கோடியை சைபர் குற்றவாளிகள் சொன்ன வங்கிக்கணக்கிற்கு அனுப்பி வைத்தார். ஆனாலும் டாக்டரிடம் அக்கும்பல் தொடர்ந்து பணம் கேட்டுக்கொண்டே இருந்தது. தான் டிஜிட்டல் முறையில் கைது செய்யப்பட்டு இருப்பதாக நினைத்துக்கொண்ட டாக்டர் தன்னை தனி அறையில் அடைத்துக்கொண்டு முடங்கிக்கிடந்தார். சென்னையில் உள்ள சைபர் கிரைம் பிரிவு போலீஸார் வேறு ஒரு வழக்கில் மோசடி கும்பலின் வங்கிக்கணக்குகளை கண்காணித்து வந்தனர். இதில் கோயமுத்தூரை சேர்ந்த ஒரு டாக்டர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒருவரிடமிருந்து மோசடி கும்பல்களின் வங்கிக்கணக்கிற்கு பணம் சென்று இருப்பதை கண்டுபிடித்தனர்.
உடனே இது குறித்து ஜார்க்கண்ட் போலீஸாருக்கு தமிழக போலீஸார் தகவல் கொடுத்தனர். அதோடு கோயபுத்தூர் சைபர் கிரைம் போலீஸாரும் உடனே உஷார்படுத்தப்பட்டனர். இதையடுத்து சைபர் கிரைம் போலீஸார் டாக்டரின் முகவரியைக் கண்டுபிடித்து அவரது வீட்டிற்கு சென்றனர். அங்கு வீட்டில் டாக்டர் தனி அறையில் கதவை அடைத்துக்கொண்டிருந்தார். அவர் தான் டிஜிட்டல் முறையில் கைது செய்யப்பட்டு இருப்பதாக நம்பிக்கொண்டிருந்தார். சைபர் கிரைம் போலீஸார் கேட்டுக்கொண்ட பிறகும் டாக்டர் கதவைத் திறக்க மறுத்தார். போலீஸார் அவருக்கு இரண்டு மணி நேரம் கவுன்சிலிங் கொடுத்தபிறகுதான் தான் மோசடி செய்யப்பட்டு இருக்கிறோம் என்பதையே நம்ப ஆரம்பித்தார்.
அதன் பிறகுதான் இது குறித்து டாக்டர் மோசடி பேர்வழிகளுக்கு எதிராக புகார் கொடுக்க முன் வந்ததாக சைபர் கிரைம் பிரிவு எஸ்.பி ஷானாஸ் இலியாஸ் தெரிவித்துள்ளார். அதோடு டாக்டரின் வங்கிக்கணக்கில் இருந்து மேலும் பணம் எடுக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது குறித்து சைபர் கிரைம் பிரிவின் கூடுதல் போலீஸ் இயக்குநர் ஜெனரல் சந்தீப் மிட்டல் கூறுகையில்,”நன்கு படித்தவர்களை கூட நவீன டிஜிட்டல் முறையில் கைது மோசடியில் சிக்கவைக்க முடியும் என்பதற்கு இந்த வழக்கு உதாரணமாக இருக்கிறது. இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு எதிராக குடிமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.