
உத்தரப் பிரதேசத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பாதுகாப்பு வாகனங்களை மறித்து அந்த மாநில அமைச்சர் தினேஷ் பிரதாப் போராட்டம் நடத்தினார்.
காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக இன்று காலை ரேபரேலி தொகுதிக்கு சென்றார்.
இந்த நிலையில், ராகுல் காந்தி பயணித்த கத்வாரா தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து அவரின் வருகைக்கு எதிர்ப்பு உ.பி. அமைச்சர் தினேஷ் பிரதாப் தலைமையில் பாஜக தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.
அப்போது அவ்வழியாக வந்த ராகுல் காந்தியின் பாதுகாப்பு வாகனங்களை மறித்த பாஜகவினர், அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
காரில் இருந்து இறங்கிய ராகுல் காந்தி, வாக்குத் திருட்டுக் குற்றச்சாட்டில் திணறுவதால் இப்படி செய்கிறார்கள் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து, மாற்றுப்பாதையில் ராகுல் காந்தியை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
இதுதொடர்பாக பேசிய அமைச்சர் தினேஷ் பிரதாப், “ராகுல் காந்திக்கும் தாய் உள்ளார். அவர் பிறரின் தாயை அவதூறாக பேச அனுமதித்திருக்க கூடாது. பிரதமரின் தாய் குறித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். பேசியவரை கட்சியைவிட்டு நீக்கி, வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், ராகுல் காந்தி அவர்களை ஊக்குவிப்பதாக தெரிகிறது. அதற்கு எதிராகதான் இன்று போராட்டம் நடத்தினோம்” என்றார்.
பிகாரில் வாக்குரிமைப் பேரணியில் ராகுல் காந்தி ஈடுபட்டிருந்த போது, தர்பங்காவில் அவர் பேசுவதற்காக போடப்பட்டிருந்த மேடையில் ஏறிய இளைஞர் ஒருவர் மோடியின் தாய் குறித்து அவதூறு கருத்து தெரிவித்தது அதிர்வலையை ஏற்படுத்தியது.
மேடையில் இளைஞர் அவதூறு கருத்து தெரிவித்த சமயத்தில், அந்த இடத்தில் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.