
விஜய் ஆண்டனியின் 25-வது படமாக ‘சக்தித் திருமகன்’ படம் உருவாகியிருக்கிறது. ‘அருவி’, ‘வாழ்’ போன்ற படங்களை இயக்கிய அருண் பிரபு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
அரசியல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது.
இப்படம் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு இன்று (செப்.17) சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய விஜய் ஆண்டனி, “எல்லோரும் ஒரு விஷயத்தைப் புரிந்துக்கொள்ள வேண்டும்.
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் நாம் அரசியல் தலைவர்களையே கைக்காட்டி பழகி விட்டோம். சமூகம் என்பது நாம்தான். பிரச்னையே நாம் எல்லோரும்தான். ஆனால் அதை யாரும் புரிந்துக்கொள்ள மட்டோம்.
சாதி உருவாக்கினதும் சரி, மதத்தை உருவாக்கினதும் சரி, மதத்தின் பேரில் சண்டையை உருவாக்கினதும் சரி எல்லா பிரிவினைகளுக்கும் மக்கள்தான் காரணம்.
அதனால் குற்றங்களுக்கு நாமும் பொறுப்பேற்று கொள்ள வேண்டியதுதான். இந்த மாதிரி பல கோணங்களில் இருந்து படத்தை எடுத்திருக்கிறோம்.
யாரையும் குறிப்பிட்டு சொல்லாமல், பொதுவாக ஒரு சமூகம் எப்படி இருக்கிறது என்பதைத்தான் இந்தப் படத்தில் பேசியிருக்கிறோம்” என்றிருக்கிறார்.
தொடர்ந்து அரசியலில் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், “கண்டிப்பாக நினைத்தால் நிறைய விஷயங்களைப் பண்ண முடியும். ஆனால் எனக்கு அரசியலில் விருப்பம் இல்லை.

நான் முழுநேரம் நடிகனாக இருக்கிறேன். படங்கள் தயாரிக்கிறேன், இசையமைக்கிறேன். எத்தனையோ பேர் அரசியலுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அதை மட்டுமே சிந்தித்துக்கொண்டு வேலை செய்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் நாம் ஏன் அரசியலுக்கு வர வேண்டும். அரசியலில் விஜய்க்கு மட்டுமின்றி எல்லோருக்கும் ஆதரவைக் கொடுப்பேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…