
காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டோம் என்று கேரள காங்கிரஸ் மூத்த தலைவர் கே. முரளீதரன் கூறியுள்ளார்.
கடந்த 2022 காங்கிரஸ் தலைவர் தேர்தல் முதலே கட்சியின் மீது சசி தரூர் அதிருப்தியில் இருந்து வருகிறார். தற்போது காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக உள்ள சசி தரூர், சமீபமாக கட்சியின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூா் ஆகிய விஷயங்களிலும் மத்திய அரசுக்கு ஆதரவாக சசி தரூா் கருத்து தெரிவித்தாா்.
சமீபத்தில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலையை விமர்சித்திருந்தது கட்சியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து கேரள மாநில காங்கிரஸ் நிா்வாகிகள் சசி தரூரை கடுமையாக விமா்சித்து வருகின்றனா்.
இந்நிலையில் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் கே. முரளீதரன் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்,
“சசி தரூர் விவகாரத்தில் காங்கிரஸ் தலைமைக்குத்தான் அதிகாரம் உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுப்பதா அல்லது கட்சியில் நீடிக்க அனுமதிப்பதா என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள். கேரளத்தைப் பொருத்தவரை சசி தரூருக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இல்லை. காங்கிரஸ் மற்றும் இந்திரா காந்தியை அவர் விமர்சித்து பேசி வருகிறார். தேவையில்லாமல் சஞ்சய் காந்தி பற்றியும் பேசி வருகிறார்.
ராகுல் காந்தியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். கேரளத்தில் அவரது செயல்பாடுகள் குறித்து நாங்கள் மிகவும் வருத்தத்தில் இருக்கிறோம். மக்களவைத் தேர்தலில் அவரது வெற்றிக்காக தொண்டர்கள் பலரும் தியாகம் செய்துள்ளார்கள்.
எனவே, வருகிற உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கமாட்டோம் என்று முடிவு செய்துள்ளோம். காங்கிரஸ் தலைமை ஏதேனும் கூறினால் அதன்படி பின்பற்றுவோம். மற்றபடி சசி தரூருக்கு எந்த ஒத்துழைப்பும் கொடுக்க மாட்டோம்” என்று கூறியுள்ளார்.