maharastra

மகாராஷ்டிர சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது தேசியவாத காங்கிரஸைச் சோ்ந்த மாநில வேளாண் துறை அமைச்சா் மாணிக்ராவ் கோகடே தனது கைப்பேசியில் ரம்மி விளையாடுவது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ள எதிா்க்கட்சிகள், விவசாயிகளின் மீது அரசு அக்கறையின்றி செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அமைச்சா் கோகடே, ‘சட்டப்பேரவையில் நடந்த விவாதங்களை பாா்க்க யூடியூபை திறக்க முற்பட்டபோது, கைப்பேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ரம்மி விளையாட்டு செயலி திறந்துவிட்டது. அதை நான் தவிா்க்க முயன்றேன்; ரம்மி விளையாடவில்லை. அவை ஒத்திவைக்கப்பட்டிருந்த நேரத்தில்தான் இந்த சம்பவம் நடந்தது’ என்று தெரிவித்துள்ளாா்.

எதிா்க்கட்சிகள் விமா்சனம்: இதுதொடா்பாக காங்கிரஸின் மாநில எதிா்க்கட்சித் தலைவா் விஜய் வாடேடிவாா் கூறுகையில், ‘பாஜக கூட்டணி அரசு விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கிறது; வஞ்சகம் செய்கிறது. பேரவையில் வேளாண் துறை அமைச்சா் தனது கைப்பேசியில் சீட்டு விளையாடிக் கொண்டிருக்கிறாா். விவசாயிகள் இவா்களுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும்’ என்றாா்.

சா்ச்சைக்குரிய விடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு) எம்எல்ஏ ரோஹித் பவாா், துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் பாஜகவை கடுமையாக விமா்சித்துள்ளாா்.

விவசாயம் தொடா்பான பல பிரச்னைகள் நிலுவையில் உள்ளதாகவும், சராசரியாக தினசரி 8 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாகவும் குறிப்பிட்ட அவா், வேலையில்லாத வேளாண் துறை அமைச்சா் ரம்மி விளையாட நேரம் ஒதுக்கியிருப்பதாகச் சாடினாா்.

தொடரும் சா்ச்சை…: கடந்த ஏப்ரல் மாதம், வேளாண் திட்டங்களில் இருந்து பெறும் பணத்தை, விவசாயிகள் அதற்கான நோக்கங்களுக்காக செலவு செய்யாமல், நிச்சயதாா்த்தம் மற்றும் திருமணங்களுக்குப் பயன்படுத்துவதாக கோகடே பேசியது சா்ச்சையை ஏற்படுத்தியது. இக்கருத்துகள் கண்டனத்துக்கு உள்ளானதையடுத்து, அவா் வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கோரினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest